தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன ...... தனதான
கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி
சொலவொ ணாதம டந்தையர் சந்தன
களப சீதள கொங்கையில் அங்கையில் ...... இருபோதேய்
களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
விழியின் மோகித கந்தசு கந்தரு
கரிய ஓதியில் இந்துமு கந்தனில் ...... மருளாதே
அமல மாகிய சிந்தைய டைந்தகல்
தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்
அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் ...... அருள்தானே
அறியு மாறுபெ றும்படி அன்பினின்
இனிய நாதசி லம்புபு லம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய்
குமரி காளிப யங்கரி சங்கரி
கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி
குறைவி லாள்உமை மந்தரி அந்தரி
வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன்
மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
அணிக ஜானன விம்பனொர் அம்புலி
மவுலி யானுறு சிந்தையு கந்தருள் ...... இளையோனே
வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.
- கமல மாதுடன் இந்திரையும்
தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியும், லக்ஷ்மியும் - சரிசொலவொணாத மடந்தையர்
இவர்களுக்கு ஒப்பு என்று சொல்ல ஒண்ணாத அழகான மாதர்களின் - சந்தன களப சீதள கொங்கையில்
சந்தனக் கலவை பூசிக் குளிர்ந்த மார்பகங்களிலும், - அங்கையில் இருபோதேய்
அழகிய கரங்களிலும், இரவு பகல் ஆகிய இரண்டு வேளைகளிலும் பொருந்தி, - களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன விழியின்
காம சாஸ்திரங்களைக் கற்றறிந்த, வஞ்சனை நிறைந்த மை தீட்டிய கண்களிலும், - மோகித கந்த சுகந்தரு கரிய ஓதியில்
மோகத்தைத் தூண்டும் நறுமணச் சுகம் தரும் கரிய கூந்தலிலும், - இந்துமுகந்தனில் மருளாதே
சந்திரனை ஒத்த முகத்திலும் மயக்கம் கொள்ளாமல், - அமல மாகிய சிந்தைய டைந்து
மாசு இல்லாத தூய சிந்தையை அடைந்து, - அகல் தொலைவி லாத அறம்பொருள் இன்பமும்
பரந்துள்ளதும், அழிவற்றதும் ஆகிய அறம், பொருள், இன்பம் பற்றிய நூல்கள் - அடைய ஓதி உணர்ந்து தணந்தபின்
முழுமையும் ஓதி உணர்ந்து, ஆசைகள் நீங்கி அடங்கியபின்னர், - அருள்தானே அறியு மாறுபெ றும்படி
உன் திருவருளை தானாகவே அறியும் வழியை யான் அடையுமாறு, - அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும்
அன்புடனே, இனிமையான ஓசையுடன் சிலம்பு ஒலிப்பதும், - அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்
செம்பொன்னால் ஆன சதங்கைகள் அணிந்துள்ளதுமான உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. - குமரி காளி
என்றும் அகலாத இளமையுடைய கன்னியும், கரிய நிறக் காளியும், - பயங்கரி சங்கரி
அடியவர் பயத்தை நீக்குபவளும், ஆன்மாக்களுக்கு சுகத்தைத் தருபவளும், - கவுரி நீலி பரம்பரை
பொன்னிறத்தாளும், நீல நிறத்தாளும், பெரும் பொருளுக்கெல்லாம் பெரியவளும், - அம்பிகை குடிலை யோகினி
உலக மாதாவும், சுத்த மாயையும், யோக சொரூபமாக இருப்பவளும், - சண்டினி குண்டலி எமதாயி
பாவிகளுக்குக் கொடியவளும், குண்டலினி சக்தியும், எங்கள் தாயும், - குறைவிலாள் உமை மந்தரி
குறைவில்லாதவளும், உமாதேவியும், சுவர்க்கம் தருபவளும், - அந்தரி வெகுவித ஆகம சுந்தரி
முடிவற்றவளும், பலவகைச் சிவாகமங்களால் துதிக்கப் பெறும் அழகியும் - தந்தருள் குமர
ஆகிய பார்வதி தேவி பெற்றருளிய குமரனே, - மூஷிகம் உந்திய ஐங்கர
மூஷிக வாகனத்தில் ஏறியவரும், ஐந்து கரத்தாரும், - கணராயன் மம விநாயகன்
கணங்களுக்குத் தலைவரும், எங்கள் விநாயகரும், - நஞ்சுமிழ் கஞ்சுகி அணி
விஷத்தைக் கக்கும் சர்ப்பத்தை இடுப்பில் ஆபரணமாகத் தரித்த - கஜானன விம்பன்
யானை முகத்தை உடையவரும், - ஒர் அம்புலி மவுலியான்
பிறைச் சந்திரனைத் தலைமுடியில் தரித்திருப்பவருமான விநாயக மூர்த்தி - உறு சிந்தை யுகந்தருள் இளையோனே
மிகவும் மனமகிழ்ந்து அருளத் தக்க இளைய பெருமானே, - வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
செழித்து வளர்ந்த வாழையும் மஞ்சளும் இஞ்சியும் - இடைவி டாது நெருங்கிய மங்கல
இடைவெளி இல்லாமல் நெருங்கி உள்ளதும், மங்கலத்தை உடையதும், - மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமாளே.
கீர்த்தி வாய்ந்ததுமான பெருநகர் திருச்செந்தூர்ப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.