திருப்புகழ் 390 இடம் அடு சுறவை (திருவருணை)

தனதன தனன தனதன தனன
தனதன தனதன ...... தந்ததான
இடமடு  சுறவை  முடுகிய  மகர 
மெறிகட  லிடையெழு  ......  திங்களாலே 
இருவினை  மகளிர்  மருவிய  தெருவி 
லெரியென  வருசிறு  ......  தென்றலாலே 
தடநடு  வுடைய  கடிபடு  கொடிய 
சரம்விடு  தறுகண  ......  நங்கனாலே 
சரிவளை  கழல  மயல்கொளு  மரிவை 
தனிமல  ரணையின  ......  லங்கலாமோ 
வடகுல  சயில  நெடுவுட  லசுரர் 
மணிமுடி  சிதறஎ  ......  றிந்தவேலா 
மறமக  ளமுத  புளகித  களப 
வளரிள  முலையைம  ......  ணந்தமார்பா 
அடலணி  விகட  மரகத  மயிலி 
லழகுட  னருணையி  ......  னின்றகோவே 
அருமறை  விததி  முறைமுறை  பகரு 
மரியர  பிரமர்கள்  ......  தம்பிரானே. 
  • இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே
    இருக்கும் இடத்திலிருந்தே வருத்தும் சுறா மீனை விரட்டி அடிக்கும் மகர மீன்கள் வாழ்வதும் அலைகளை வீசுவதுமான கடலில் எழுகின்ற சந்திரனாலும்,
  • இரு வினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே
    நல் வினை தீ வினை இரண்டுக்கும் காரணமான மாதர்கள் வாழும் தெருவில் நெருப்பைப் போல வீசுகின்ற சிறிய தென்றல் காற்றினாலும்,
  • தட நடு உடைய கடி படு கொடிய சரம் விடு தறு கண் அநங்கனாலே
    தடாகத்தின் நடுவே உள்ள நறு மணம் வீசுகின்ற கொடியதான தாமரை, நீலோத்பலம் ஆகிய மலர்ப் பாணங்களைச் செலுத்தும் இரக்கமற்ற மன்மதனாலும்,
  • சரி வளை கழல மயல் கொளும் அரிவை தனி மலர் அணையில் நலங்கலாமோ
    சரிகின்ற வளையல்கள் கழன்று விழுமாறு காம மோகம் கொள்ளும் இந்தப் பெண் தனியாக மலர்ப் படுக்கையில் நொந்து போவது தகுமோ?
  • வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா
    வடக்கே உள்ள சிறந்த மேரு மலை போன்ற பெரிய உடலைக் கொண்ட அசுரர்களின் மணி முடிகள் சிதறிப் போகும்படி செலுத்திய வேலனே,
  • மற மகள் அமுத புளகித களப வளர் இள முலையை மணந்த மார்பா
    வேடர் மகளான வள்ளியை, அமுதமும் புளகிதம் கொண்ட சந்தனக் கலவை பூசப்பட்ட வளர்ந்த இளமை வாய்ந்த மார்பினளான வள்ளியை, மணம் கொண்ட திருமார்பனே,
  • அடல் அணி விகடம் மரகத மயிலில் அழகுடன் அருணையில் நின்ற கோவே
    வலிமையும், அலங்காரமும், வசீகரமும், பச்சை நிறமும் உள்ள மயிலில் அழகுடன் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அரசே,
  • அரு மறை விததி முறை முறை பகரும் அரி அர பிரமர்கள் தம்பிரானே.
    அரிய வேதங்களின் கூட்டம் முறைப்படி ஓதும் திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவர்க்கும் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com