திருப்புகழ் 376 கயல் விழித்தேன் (திருவருணை)

தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் ...... தனதான
கயல்விழித்  தேனெனைச்  செயலழித்  தாயெனக் 
கணவகெட்  டேனெனப்  ......  பெறுமாது 
கருதுபுத்  ராஎனப்  புதல்வரப்  பாஎனக் 
கதறிடப்  பாடையிற்  ......  றலைமீதே 
பயில்குலத்  தாரழப்  பழையநட்  பாரழப் 
பறைகள்கொட்  டாவரச்  ......  சமனாரும் 
பரியகைப்  பாசம்விட்  டெறியுமப்  போதெனைப் 
பரிகரித்  தாவியைத்  ......  தரவேணும் 
அயிலறச்  சேவல்கைக்  கினிதரத்  தோகையுற் 
றருணையிற்  கோபுரத்  ......  துறைவோனே 
அமரரத்  தாசிறுக்  குமரிமுத்  தாசிவத் 
தரியசொற்  பாவலர்க்  ......  கெளியோனே 
புயலிளைப்  பாறுபொற்  சயிலமொய்ச்  சாரலிற் 
புனமறப்  பாவையைப்  ......  புணர்வோனே 
பொடிபடப்  பூதரத்  தொடுகடற்  சூரனைப் 
பொருமுழுச்  சேவகப்  ......  பெருமாளே. 
  • கயல்விழித்தேன் எனைச் செயலழித் தாயென
    கண்விழித்து உனக்கு எத்தனை நாள் பணிவிடைகள் செய்தேன், என்னை செயலற்றுப் போகச் செய்துவிட்டாயே என்றும்,
  • கணவகெட்டேனெனப் பெறுமாது
    கணவனே, உன்னை இழந்து நான் அழிந்து போனேனே என்றும் மனைவி அழவும்,
  • கருதுபுத்ராஎன
    என் கருத்திலேயே நிலைத்து நிற்கும் மகனே என்று தாயார் அழவும்,
  • புதல்வர் அப்பா எனக் கதறிட
    புதல்வர் அப்பா எனக் கதறி அழவும்,
  • பாடையிற் றலைமீதே
    பிணத்தை வைத்த பாடையின் தலைமாட்டில் நின்று
  • பயில்குலத்தாரழப் பழையநட்பாரழ
    பழகிய சுற்றத்தார் அழவும், பழமையான நட்பினர்கள் அழவும்,
  • பறைகள்கொட்டாவர
    பறைகளை முழக்கிக் கொண்டு பலர் வரவும்,
  • சமனாரும் பரியகைப் பாசம்விட்டெறியுமப்போது
    யமனும் பருத்த கையிலுள்ள பாசக் கயிற்றை என்மீது விட்டெறியும் அந்தத் தருணத்தில்
  • எனைப் பரிகரித்து ஆவியைத் தரவேணும்
    என்னைக் காப்பாற்றி உயிரைத் தந்தருள்க.
  • அயில் அறச் சேவல்கைக்கு இனிதர
    வேலும், தர்ம நெறி வழுவாத சேவற்கொடியும் கைகளில் இனிது விளங்க,
  • தோகையுற்று அருணையிற் கோபுரத்துறைவோனே
    மயில் மீது விளங்கி, திருவண்ணாமலைக் கோபுரத்து வாயிலில் வீற்றிருப்பவனே,
  • அமரர் அத்தா சிறுக் குமரிமுத்தா
    தேவர்களுக்குத் தலைவனே, அவர்களிடை வளர்ந்த சிறிய குமரி தேவயானையை முத்தமிட்டு மகிழ்வோனே,
  • சிவத்தரியசொற் பாவலர்க்கு எளியோனே
    சிவபிரானை அருமையான சொற்களால் பாடும் புலவர்களுக்கு எளியவனே,
  • புயல் இளைப்பாறு பொற் சயில மொய்ச் சாரலில்
    மேகங்கள் தங்கி இளைப்பாறும் அழகிய மலையாம் வள்ளிமலையின் நெருங்கிய மலைச்சாரலில்
  • புனமறப் பாவையைப் புணர்வோனே
    தினைப்புனம் காத்த வேடர்குலப் பெண் வள்ளியைக் கூடியவனே,
  • பொடிபடப் பூதரத்தொடு கடற் சூரனை
    தூளாகும்படியாக கிரெளஞ்ச மலையோடும், கடலில் மாமரமாக நின்ற சூரனோடும்
  • பொருமுழுச் சேவகப் பெருமாளே.
    போர் புரிந்த, பரிபூரண பராக்கிரமத்தை உடைய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com