திருப்புகழ் · 365பரிமளம் மிக உள (திருவானைக்கா)
parimaLammigauLa
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன ...... தனதான
பரிமள மிகவுள சாந்து மாமத
முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு ...... முகில்போலே
பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
பரிபுர மலரடி வேண்டி யேவிய
பணிவிடை களிலிறு மாந்த கூளனை ...... நெறிபேணா
விரகனை யசடனை வீம்பு பேசிய
விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு
வெகுளியை யறிவது போங்க பாடனை ...... மலமாறா
வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை
விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது ...... மொருநாளே
கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநக ...... ருறைபேதை
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை யுலகினை யீன்ற தாயுமை
கரிவன முறையகி லாண்ட நாயகி ...... யருள்பாலா
முரணிய சமரினில் மூண்ட ராவண
னிடியென அலறிமு னேங்கி வாய்விட
முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே
முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக
முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
பத உரை · word meanings
- பரிமளம் மிக உள சாந்து மா(ன்) மத(ம்)
நறுமணம் மிக்க கலவைச் சாந்து, கஸ்தூரி, - முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய
வாசனை வீசும் நல்ல பூக்கள் இவைகளில் பொருந்திக் கூடியதும், - பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில்போல
பல ரேகைகளைக் கொண்ட வண்டுகளின் துயில் கொண்டதும், ஆகாயத்தில் உள்ள கருமேகம் போன்றதும், - பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள்
பரந்துள்ள இருளைப் போல் கரியதுமான கூந்தலை உடைய மாதர்களின் - பரிபுர மலர் அடி வேண்டி
சிலம்பு அணிந்த மலர் போன்ற அடிகளை விரும்பி, - ஏவிய பணி விடைகளில் இறுமாந்த கூளனை
அவர்கள் இட்ட வேலைகளை பணியாளாகச் செய்வதில் பெருமைகொள்ளும் பயனற்ற என்னை, - நெறி பேணா விரகனை அசடனை
ஒழுக்க முறையை அனுஷ்டிக்காத வீணனை, மூடனை, - வீம்பு பேசிய விழலனை
கர்வப் பேச்சு பேசும் உதவாக் கரையை, - உறு கலை ஆய்ந்திடா முழு வெகுளியை
உரிய கலை நூல்களை ஆய்ந்து அறியாத முழு வெறுப்பு மிக்கவனை, - அறிவது போம் கபாடனை
அறிவு நீங்கிய வஞ்சகனை, - மலம் மாறா வினையனை உரை மொழி சோர்ந்த பாவியை
குற்றங்கள் நீங்காத வினை நிரம்பியவனை, சொல்லும் சொல் தவறிய பாவியை, - விளிவு உறு நரகு இடை வீழ்ந்த மோடனை
இறந்தபின் சேரும் நரகத்தில் இப்போதே விழுந்துள்ள மூடனை, - வினவி முன் அருள் செய்து பாங்கின் ஆள்வதும் ஒரு நாளே
எனக்கு என்ன ஆயிற்று என்று கவனித்துக் கேட்டு, திருவருள் பாலித்து, நன்கு ஆண்டருளுவதாகிய காலமும் ஒன்று உண்டா? - கருதலர் திரி புரம் மாண்டு நீறு எழ
பகைவர்களின் முப்புரங்களை அழித்துத் தூளாக்க - மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி
மேரு மலையை ஒரு கையில் வில்லாக வளைத்த நாராயணி (விஷ்ணுவின் தங்கை), - கழல் அணி மலை மகள் காஞ்சி மா நகர் உறை பேதை
சிலம்பணிந்த மலை மகள், காஞ்சி நகரில் விளங்கும் தேவி காமாக்ஷி, - களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
இன்பமாய் ஆடும் மயில் போன்றவள், சிவபெருமானுடன் வாழும் அழகி, - கடல் உடை உலகினை ஈன்ற தாய் உமை
கடலை ஆடையாகக்கொண்ட உலகத்தை ஈன்ற தாயாகிய உமா தேவி, - கரி வனம் உறை அகிலாண்ட நாயகி அருள் பாலா
திருவானைக்காவில் வீற்றிருக்கும் அகிலாண்ட நாயகி அருளிய குழந்தையே, - முரணிய சமரினில் மூண்ட ராவணன்
மாறுபட்ட போரில் முற்பட்டெழுந்த இராவணன் - இடி என அலறி முன் ஏங்கி வாய்விட
(வலியினால்) இடி ஒலியுடன் அலறியும், அதற்கு முன் கலங்கி வாய்விட்டு அழவும், - முடி பல திருகிய நீண்ட மாயவன் மருகோனே
(அவனுடைய) பல தலைகளை அரிந்துத் தள்ளிய இராமனும், விஸ்வரூபம் எடுத்தவனுமாகிய திருமாலின் மருகனே, - முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல்இடை
முன்பு, ஒப்பற்ற குற மகள் வள்ளியின் நுண்ணிய நூல்போன்ற இடை மீதும், - இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக
இரண்டு மார்புகளின் மீதும் தோய்ந்த காதலனே, - முது பழ மறை மொழி ஆய்ந்த தேவர்கள் பெருமாளே.
மிகப் பழையதான வேதங்களை ஆய்ந்துள்ள தேவர்களின் பெருமாளே.



