திருப்புகழ் · 350வம்பறாச்சில (காஞ்சீபுரம்)

vambaRAchchila

தந்த தாத்தன தன்ன தனந்தன
தத்தத் தத்தத் ...... தனதானா
வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
யத்துக் கத்துத் ...... திரையாளர்
வன்க லாத்திரள் தன்னை யகன்றும
னத்திற் பற்றற் ...... றருளாலே
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
கிப்பொற் பத்மக் ...... கழல்சேர்வார்
தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
வைக்கச் சற்றுக் ...... கருதாதோ
வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு
வெற்புப் பொட்டுப் ...... படமாசூர்
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
வெட்சிச் சித்ரத் ...... திருமார்பா
கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு
கைக்குக் கற்புத் ...... தவறாதே
கம்பை யாற்றினி லன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • வம்பறாச்சில கன்னமிடும்
    வம்பு வார்த்தைகள் நீங்காததும், சில பழைய நூல்களிலிருந்து சொற்களைத் திருடியும்,
  • சமயத்துக் கத்துத் திரையாளர்
    சமயவாதம் செய்து அலைகடல் போல கத்தி ஆரவாரிப்பவரின்
  • வன்கலாத்திரள் தன்னை யகன்று
    வன்மையான கலைக் கூட்டத்தினின்று விலகி,
  • மனத்திற் பற்றற்று அருளாலே
    மனத்தில் உள்ள பற்றுக்கள் அனைத்தும் அறப்பெற்று,
  • தம் பராக்கு அற
    தம்மைத் தாமே நோக்கியுள்ள அகம்பாவம் அற்றுப்போய்,
  • நின்னை யுணர்ந்துருகி
    உன்னையே உணர்ந்து உள்ளம் உருகி,
  • பொற் பத்மக் கழல்சேர்வார்தம்
    அழகிய தாமரை மலரன்ன அடிகளைச் சேர்பவர்களுடைய
  • குழாத்தினில் என்னையும் அன்பொடு
    கூட்டத்தினில் அடியேனையும் அன்போடு
  • வைக்கச் சற்றுக் கருதாதோ
    கூட்டிவைக்க உன் திருவுள்ளத்தில் சற்று நினைக்கலாகாதோ?
  • வெம்பராக்ரம மின்னயில் கொண்டு
    வெப்பமான ஆற்றலும், ஒளியும் மிக்க வேலாயுதத்தைக் கொண்டு
  • ஒருவெற்புப் பொட்டுப் பட
    ஒப்பற்ற கிரெளஞ்சமலை பொடிபடும்படிச் செய்து,
  • மாசூர் வென்ற பார்த்திப
    மாமரமாய் நின்ற சூரனை வென்ற அரசே,
  • பன்னிரு திண்புய
    வலிமை மிக்க பன்னிரண்டு தோள்களை உடையவனே,
  • வெட்சிச் சித்ரத் திருமார்பா
    வெட்சிமாலையை அணிந்த அழகிய திருமார்பனே,
  • கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறுகைக்கு
    ஏகாம்பரேஸ்வரராய் விளங்கும் சிவபிரானின் பாம்புகள் நிலைத்துள்ள தோள்களைத் தழுவும் பொருட்டு,
  • கற்புத் தவறாதே
    கற்பு நிலை தவறாமல்,
  • கம்பை யாற்றினில் அன்னை தவம்புரி
    கம்பா நதிக்கரையில் காமாக்ஷி அம்மை தவம் செய்திருந்த*
  • கச்சிச் சொக்கப்பெருமாளே.
    கச்சி என்ற காஞ்சீபுரத்தில் அழகாக வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits