தத்தத்தத் தானன தானன
தத்தத்தத் தானன தானன
தத்தத்தத் தானன தானன ...... தனதான
மக்கட்குக் கூறரி தானது
கற்றெட்டத் தான்முடி யாதது
மற்றொப்புக் கியாதுமொ வாதது ...... மனதாலே
மட்டிட்டுத் தேடவொ ணாதது
தத்வத்திற் கோவைப டாதது
மத்தப்பொற் போதுப கீரதி ...... மதிசூடும்
முக்கட்பொற் பாளரு சாவிய
அர்த்தக்குப் போதக மானது
முத்திக்குக் காரண மானது ...... பெறலாகா
முட்டர்க்கெட் டாதது நான்மறை
யெட்டிற்றெட் டாதென வேவரு
முற்பட்டப் பாலையி லாவது ...... புரிவாயே
செக்கட்சக் ராயுத மாதுலன்
மெச்சப்புற் போதுப டாவிய
திக்குப்பொற் பூதர மேமுதல் ...... வெகுரூபம்
சிட்டித்துப் பூதப சாசுகள்
கைக்கொட்டிட் டாடம கோததி
செற்றுக்ரச் சூரனை மார்பக ...... முதுசோரி
கக்கக்கைத் தாமரை வேல்விடு
செச்சைக்கர்ப் பூரபு யாசல
கச்சுற்றப் பாரப யோதர ...... முலையாள்முன்
கற்புத்தப் பாதுல கேழையு
மொக்கப்பெற் றாள்விளை யாடிய
கச்சிக்கச் சாலையில் மேவிய ...... பெருமாளே.
- மக்கட்குக் கூற அரிதானது
மக்களுக்கு இது இத்தன்மையது என எடுத்துக்கூற அரிதானது, - கற்று எட்டத் தான்முடி யாதது
கற்ற கல்வியாலும் அதனை எட்ட முடியாதது, - மற்றொப்புக் கியாதும் ஒவாதது
மற்றபடி அதற்கு உவமை ஏதும் ஒவ்வாதது, - மனதாலே மட்டிட்டுத் தேடவொணாதது
மனதினால் அதை அளவிட்டுத் தேடி அறியமுடியாதது, - தத்வத்திற் கோவைபடாதது
எத்தகைய ஆராய்ச்சியிலும் அதனை வரிசைப்படுத்த முடியாதது, - மத்தப்பொற் போது பகீரதி மதிசூடும்
ஊமத்தை மலரையும், தங்கநிறக் கொன்றை மலரையும், கங்கைநதியையும், பிறைச்சந்திரனையும் சடையிலே சூடும் - முக்கட்பொற்பாளர் உசாவிய
முக்கண்ணராகிய அழகிய சிவபிரான் சொல்லுக என்று கேட்க - அர்த்தக்குப் போதக மானது
சொல்லப்பட்ட பொருளுக்கு உபதேச வித்தாக இருப்பது, - முத்திக்குக் காரண மானது
மோட்சத்துக்குக் காரணமாக இருப்பது, - பெறலாகா முட்டர்க்கெட் டாதது
பெறுவதற்கு முடியாததாய், மூடர்களுக்கு எட்டாததாய் இருப்பது, - நான்மறை யெட்டிற்று எட்டாதெனவேவரு
நான்கு வேதங்களும் எட்டுவதற்கு முயன்றாலும், எட்ட முடியாமல் இருக்கும் பொருள் அது, - முற்பட்டப் பாலையி லாவது புரிவாயே
முதன்மையான பொருளுக்கும் அப்பாற்பட்ட பொருள் எதுவோ, அதனை எனக்கு உபதேசித்து அருள்வாயாக. - செக்கட் சக்ராயுத மாதுலன்
செங்கண்களையும், சக்ராயுதத்தையும் உடைய தாய்மாமன் திருமால் - மெச்சப்புற் போது படாவிய
மெச்சிப் புகழும்படியாக, புல்லையும் மலரையும் பெரிதாகப் படரவிட்டு, - திக்குப்பொற் பூதர மேமுதல்
திசைகளில் உள்ள பொன் மேரு மலை முதலாக - வெகுரூபம் சிட்டித்துப் பூதப சாசுகள்
பலப்பல உருவங்களைச் சிருஷ்டித்து, பூதங்களும் பேய்களும் - கைக்கொட்டிட் டாட மகோததி செற்று
கைகொட்டி ஆடும்படியாக, பெருங்கடலை வற்றடித்து, - உக்ரச் சூரனை மார்பக முதுசோரி கக்க
கடுமையான சூரனுடைய மார்பகத்திலிருந்து மிகுந்த இரத்தம் கக்கச்செய்யுமாறு, - கைத் தாமரை வேல்விடு
தாமரைமலர் போன்ற திருக்கரத்தினின்று வேலாயுதத்தை விட்ட - செச்சைக்கர்ப்பூர புயாசல
செஞ்சந்தனமும் பச்சைக் கற்பூரமும் பூசிய புயமலையை உடையோனே, - கச்சுற்றப் பார பயோதர முலையாள்
கச்சணிந்த கனமான பால் ஊறும் மார்பினாளும், - முன் கற்புத் தப்பாது உலகேழையும் ஒக்கப்பெற்றாள்
முன்னர், கற்புநிலை தவறாமல் ஏழு உலகங்களையும் ஒருங்கே ஈன்றளித்தவளுமான காமாட்சித் தாயார் - விளை யாடிய கச்சிக்கச் சாலையில்
திருவிளையாடல்கள் பல புரிந்த காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுரம் என்னும் திருத்தலத்தில் - மேவிய பெருமாளே.
வீற்றிருக்கும் பெருமாளே.



