தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன ...... தனதான
படிறொ ழுக்கமு மடம னத்துள
படிப ரித்துட ...... னொடிபேசும்
பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள்
பலகொ டுத்தற ...... உயிர்வாடா
மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
விதன முற்றிட ...... மிகவாழும்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத ...... மருள்வாயே
கொடியி டைக்குற வடிவி யைப்புணர்
குமர கச்சியி ...... லமர்வோனே
குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
குவளை முற்றணி ...... திருமார்பா
பொடிப டப்பட நெடிய விற்கொடு
புரமெ ரித்தவர் ...... குருநாதா
பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
பொருது ழக்கிய ...... பெருமாளே.
- படிறொழுக்கமும் மடம னத்து
வஞ்சனையுடன் கூடிய நடையை மூட மனத்துள் - உளபடி பரித்து உடன் நொடிபேசும்
உள்ளபடியே வைத்துக்கொண்டு, உடனுக்கு உடன் தந்திரமாகப் பேசும் - பகடிகட்கு உள மகிழ மெய்ப்பொருள்
பகட்டுப் பொது மகளிருக்கு, அவர்கள் மனம் மகிழ்வதற்காக, எனது உடம்பையும் பொருட்கள் - பலகொடுத்து அற உயிர்வாடா
பலவற்றையும் கொடுத்து, மிகவும் உயிர் வாடி நின்று, - மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
தரித்திரம் என்ற பெரிய வடவாக்கினி* என்னைச் சுட்டுப் பொசுக்க, - விதன முற்றிட மிகவாழும்
பெருந்துன்பம் ஏற்பட்டு, அதனால் மிகத் துயரத்தோடு வாழும் - விரகு கெட்டு அரு நரகு விட்டு
அந்தக் கேவலமான வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, - இருவினையறப் பதம் அருள்வாயே
நல்வினை, தீவினை என்ற என் இருவினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக. - கொடியிடைக்குற வடிவியைப்புணர் குமர
கொடி போன்ற இடையை உடைய குறமகள், அழகிய வள்ளியை மருவிக் கலந்த குமரனே, - கச்சியில் அமர்வோனே
கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருப்பவனே, - குரவு செச்சைவெண் முளரி புத்தலர் குவளை
குராமலர், வெட்சி மலர், வெண்தாமரை, புதிதாக மலர்ந்த குவளைப்பூ - முற்றணி திருமார்பா
இவை எல்லாம் நிரம்ப அணிந்து கொள்ளும் அழகிய மார்பினனே, - பொடிபடப்பட நெடிய விற்கொடு
தூளாகி அழியும்படி, மேருமலையாகிய நீண்ட வில்லினைக் கொண்டு - புரமெ ரித்தவர் குருநாதா
திரிபுரத்தை (சிரித்தே) எரித்தவரான சிவபிரானின் குருநாதனே, - பொருதிரைக்கடல் நிருதரைப்படை
மாறுபட்டு எழுகின்ற அலைகளை உடைய கடலையும், அசுரர்களையும், அவர்களது சேனையையும் - பொருது உழக்கிய பெருமாளே.
போர் செய்து கலக்கி அதிரவைத்த பெருமாளே.



