திருப்புகழ் · 342கோவைச் சுத்த (காஞ்சீபுரம்)

kOvaichchuththa

தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான
கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் ...... கொடியார்தங்
கோலக் கச்சுக் கட்டிய முத்தத் ...... தனமேவிப்
பாவத் துக்குத் தக்கவை பற்றித் ...... திரியாதே
பாடப் பத்திச் சித்த மெனக்குத் ...... தரவேணும்
மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் ...... பொரும்வேலா
மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் ...... கினியோனே
சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் ...... பதியோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • கோவைச் சுத்தத் துப்பு அதரத்துக் கொடியார் தம்
    கொவ்வைப் பழம் போலவும், சுத்தமான பவளம் போலவும் சிவந்த வாயிதழ்களை உடைய கொடி போன்ற விலைமாதர்களின்
  • கோலக் கச்சுக் கட்டிய முத்தத் தனம் மேவி
    அழகிய கச்சு அணிந்துள்ளதும், முத்து மாலை அணிந்துள்ளதுமான மார்பகங்களை விரும்பி,
  • பாவத்துக்குத் தக்கவை பற்றித் திரியாதே
    பாவ காரியங்களுக்குத் தக்கவையான செயல்களையே பற்றிக்கொண்டுச் செய்து திரியாமல்,
  • பாடப் பத்திச் சித்தம் எனக்கு தரவேணும்
    உன்னைப் பாடிப் புகழப் பக்தி நிறைந்த உள்ளத்தை எனக்குத் தந்தருள வேண்டும்.
  • மாவைக் குத்திக் கைத்து அற எற்றிப் பொரும் வேலா
    மாமரமாக வந்த சூரனைக் குத்தி, அவனை வெறுத்து அடியோடு கொன்று சண்டை செய்த வேலை ஏந்தியவனே,
  • மாணிக்கச் சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே
    மாணிக்கம் முதலிய ரத்தினங்கள் நிறைந்த விண்ணுலகத்தில் இருந்த ஒப்பற்ற கிளியாகிய தேவயானைக்கு இனியவனே,
  • சேவல் பொன் கைக் கொற்றவ கச்சிப் பதியோனே
    சேவற் கொடியை அழகிய கையில் கொண்ட வீரனே, காஞ்சீபுரத்தில் வாழ்பவனே,
  • தேவச் சொர்க்கச் சக்கிரவர்த்திப் பெருமாளே.
    தேவர்கள் வாழும் விண்ணுலகத்துக்குச் சக்கரவர்த்தியாகிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits