திருப்புகழ் · 339கருமமான பிறப்பற (காஞ்சீபுரம்)

karumamAnapiRappaRa

தனன தானன தத்தன தனதன
தானா தத்தத் ...... தனதான
கரும மானபி றப்பற வொருகதி
காணா தெய்த்துத் ...... தடுமாறுங்
கலக காரண துற்குண சமயிகள்
நானா வர்க்கக் ...... கலைநூலின்
வரும நேகவி கற்பவி பரிதம
னோபா வத்துக் ...... கரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
மாயா மற்குப் ...... புகல்வாயே
தரும வீம அருச்சுன நகுலச
காதே வர்க்குப் ...... புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட் ...... டினிலாளுங்
குரும கீதல முட்பட வுளமது
கோடா மற்க்ஷத் ...... ரியர்மாளக்
குலவு தேர்கட வச்சுதன் மருககு
மாரா கச்சிப் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • கருமமான பிறப்பற
    வினையின் காரணமாக நேர்ந்த இந்தப் பிறப்பு தொலைவதற்கு
  • ஒருகதி காணாது எய்த்துத் தடுமாறும்
    ஒரு வழியும் தெரியாமல் இளைத்துத் தடுமாறுபவரும்,
  • கலக காரண துற்குண சமயிகள்
    குழப்பத்தை விளைவிக்கும் பொல்லாத குணமுடையவருமான சமயவாதிகளின்
  • நானா வர்க்கக் கலைநூலின்
    பலவிதமான சாஸ்திர நூல்களில்
  • வரும் அநேக விகற்ப விபரித
    சொல்லப்பட்ட அனேக மாறுபாடுகள் கொண்டதும், பொருந்தாததுமான
  • மனோபாவத்துக்கு அரிதாய
    மன உணர்ச்சிக்கு எட்டாததான,
  • மவுன பூரித சத்திய வடிவினை
    மெளனநிலை, நிறைவு இவற்றைக் கொண்டதான, உண்மை ஒளியை
  • மாயா மற்குப் புகல்வாயே
    நான் இறப்பின்றி விளங்குவதற்காக உபதேசித்து அருள்வாயாக.
  • தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்குப் புகலாகி
    தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவர்க்கும் பாதுகாப்பு அளிப்பவனாகி,
  • சமர பூமியில் விக்ரம வளைகொடு
    போர்க்களத்தில் வெற்றிச் சங்கை (பாஞ்சஜன்யத்தை) ஊதி,
  • நாளோர் பத்தெட்டினிலாளும்
    நாள் ஒரு பதினெட்டில் நிகழும் போரில்
  • குரு மகீதல முட்பட
    குருக்ஷேத்திரம் பாழ்நிலமாக,
  • உளமது கோடாமல் க்ஷத்ரியர்மாள
    தனது திருவுள்ளம் கோணாது நெறிமுறையில் நிற்கவும், கெளரவ அரசர்கள் யாவரும் இறந்து படவும்,
  • குலவு தேர்கடவு அச்சுதன் மருக
    (அர்ச்சுனனின்) விளக்கமுற்ற தேரைச் செலுத்திய அச்சுதனின் (திருமாலின்) மருகனே,
  • குமாரா கச்சிப் பெருமாளே.
    குமாரஸ்வாமியே, காஞ்சீபுரத்துப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits