திருப்புகழ் 337 கச்சு இட்ட அணி (காஞ்சீபுரம்)

தத்தத் தனதன தத்தத் தனதன
தத்தத் தனதன ...... தனதான
கச்சிட்  டணிமுலை  தைச்சிட்  டுருவிய 
மச்சக்  கொடிமதன்  ......  மலராலுங் 
கச்சைக்  கலைமதி  நச்சுக்  கடலிடை 
அச்சப்  படவெழு  ......  மதனாலும் 
பிச்சுற்  றிவளுள  மெய்ச்சுத்  தளர்வது 
சொச்சத்  தரமல  ......  இனிதான 
பிச்சிப்  புதுமலர்  வைச்சுச்  சொருகிய 
செச்சைத்  தொடையது  ......  தரவேணும் 
பச்சைத்  திருவுமை  யிச்சித்  தருளிய 
கச்சிப்  பதிதனி  ......  லுறைவோனே 
பற்றிப்  பணிபவர்  குற்றப்  பகைகெட 
உற்றுப்  பொரவல  ......  கதிர்வேலா 
இச்சித்  தழகிய  கொச்சைக்  குறமகள் 
மெச்சித்  தழுவிய  ......  திருமார்பா 
எட்டுக்  குலகிரி  முட்டப்  பொடிபட 
வெட்டித்  துணிசெய்த  ......  பெருமாளே. 
  • கச்சு இட்ட அணி முலை தைச்சிட்டு உருவிய மச்சக் கொடி மதன் மலராலும்
    கச்சை அணிந்த அழகிய மார்பகத்தைத் தைத்துக் கொண்டு ஊடுருவிச் சென்ற, மீன் கொடியைக் கொண்ட மன்மதனுடைய பூக்கணைகளாலும்,
  • கச்சைக் கலை மதி நச்சுக் கடல் இடை அச்சப் பட எழும் அதனாலும்
    தழும்புகள் உடைய கலைகளுடன் கூடிய சந்திரன் ஆலகால விஷத்தை உடைய கடலினிடையே இவள் பயப்படும்படி எழுந்துள்ள அந்தச் செய்கையாலும்,
  • பிச்சு உற்று இவள் உளம் எய்ச்சுத் தளர்வது சொச்சத் தரம் அல
    பைத்தியம் பிடித்து இத் தலைவி மனம் இளைத்துத் தளர்ச்சி அடைவது சாமானியமான அளவு இல்லை.
  • இனிதான பிச்சிப் புது மலர் வைச்சுச் சொருகிய செச்சைத் தொடை அது தரவேணும்
    (ஆதலால், முருகா,) இனிமை தரும் ஜாதி மல்லிகையின் புது மலர்கள் இடையிடையே வைத்துச் சொருகப்பட்ட வெட்சி மாலையை நீ இவளுக்குத் தந்தருள வேண்டும்.
  • பச்சைத் திரு உமை இச்சித்து அருளிய கச்சிப் பதி தனில் உறைவோனே
    பச்சை நிறமுள்ள உமா தேவி அன்புடன் (சிவ பிரானுக்கு) பூஜை செய்து அருளிய காஞ்சி மா நகரத்தில் உறைபவனே,
  • பற்றிப் பணிபவர் குற்றப் பகை கெட உற்றுப் பொர வல கதிர் வேலா
    அன்பு வைத்து உன்னைப் பணிபவர்களுக்கு குற்றம் செய்யும் பகைவர்கள் அழிந்து போக, வந்து போர் செய்து உதவிய கதிர் வேலனே,
  • இச்சித்து அழகிய கொச்சைக் குறமகள் மெச்சித் தழுவிய திருமார்பா
    உன் மீது காதல் கொண்டு அழகு வாய்ந்தவளும், மழலைமொழி பேசும் குறத்தி ஆனவளுமான வள்ளி நாயகி மெச்சித் தழுவிய அழகிய மார்பனே,
  • எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட வெட்டித் துணி செய்த பெருமாளே.
    ஏழு குல மலைகளுடன் கிரெளஞ்சமலையும் சேர்த்து எட்டு மலைகளும் அடியோடு பொடியாகும்படி சண்டை செய்து, அசுரர்களை வெட்டித் துணித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com