தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான
தலைவலை யத்துத் தரம்பெ றும்பல
புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
தருமயில் செச்சைப் புயங்க யங்குற ...... வஞ்சியோடு
தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
தழுவிய செக்கச் சிவந்த பங்கய
சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ...... ளம்புகாளப்
புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி
தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண
புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன ...... னம்பெறாதோ
பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய
துறவனெ னத்திக் கியம்பு கின்றது
புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை ...... தந்திடாதோ
குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி
யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி
குறைவற முப்பத் திரண்ட றம்புரி ...... கின்றபேதை
குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
கணபண ரத்நப் புயங்க கங்கணி
குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின ...... வஞ்சிநீலி
கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி
கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி
கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி ...... யெங்களாயி
கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை
சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி
கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் ...... தம்பிரானே.
- தலை வலையத்துத் தரம்பெறும்பல புலவர்
முதல் வகுப்பில் வைக்கத்தக்க தகுதி பெற்ற பல புலவர்கள் - மதிக்கச் சிகண்டி
போற்றித் துதிக்கும் உனது மயிலையும், - குன்றெறி தரும் அயில்
கிரெளஞ்சமலையைப் பிளந்து எறிந்த உன் வேலையும், - செச்சைப் புயம்
வெட்சி மாலையைப் புனைந்த உன் திருப்புயங்களையும், - கயங்குற வஞ்சியோடு
(கயவஞ்சி) தேவயானையையும், குறவஞ்சி வள்ளியையும், - தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
பொற்சங்கிலி, முத்துச் சலங்கை, கிண்கிணி ஆகியவை - தழுவிய செக்கச் சிவந்த பங்கய சரணமும்
தழுவிய செக்கச் சிவந்த உனது சரணாம்புஜத்தையும் - வைத்துப் பெரும்ப்ர பந்தம்விளம்பு
பாட்டுக்குப் பொருளாக வைத்து பெரிய பாமாலைகளைப் பாடவல்ல, - காளப் புலவனென
கரிய மேகம் மழை பொழிவதுபோலப் பொழியும் புலவன் இவன் என்று சொல்லும்படியும், - தத்துவந்தரந்தெரி தலைவனென
உண்மை ஞானம் உணர்ந்த தலைவன் இவன் எனக் கூறும்படியும், - தக்கறஞ்செயுங்குண புருஷனென
தக்க தர்மங்களைச் செய்யும் குணவானான சத்புருஷன் இவன் என்றும் உலகோர் கூறும்படியுமாக, - பொற் பதந்தருஞ் சனனம்பெறாதோ
மேலான பதவியைத் தரும் பிறப்பை என் ஆத்மா பெறாதோ? - பொறையனெனப் பொய்ப் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவனென
இவன் பொறுமைசாலி என்றும், இந்தப் பொய்யுலகைக் கண்டு அஞ்சும் துறவி என்றும், - திக்கியம்புகின்றது புதுமையல
எல்லாத் திசைகளிலும் உள்ளோர் அடியேனைக் கூறுவது ஆச்சரியம் இல்லை. - சிற் பரம்பொருந்துகை தந்திடாதோ
அறிவுக்கும் மேலான பதத்தில் சேரும் பேற்றை உன் திருவருள் தந்திடாதோ? - குலசயிலத்துப் பிறந்த பெண்கொடி
சிறந்த மலையாகிய இமயமலைக்குப் பிறந்த கொடி போன்றவள், - உலகடை யப்பெற் றவுந்தி
உலகம் முழுவதையும் ஈன்றெடுத்த திருவயிற்றை உடையவள், - அந்தணி
அழகிய தட்பத்தை (காருண்யத்தை) உடையவள், - குறைவற முப்பத்திரண்டு அறம்புரிகின்றபேதை
குறைவில்லாமல் முப்பத்திரண்டு அறங்களையும்* முறையே புரியும் பாலாம்பிகை, - குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
நற்குணங்களைத் தரித்தவள், மந்திர யந்திரத்தில் வீரத்துடன் வீற்றிருக்கும் சங்கரி, - கணபண ரத்நப் புயங்க கங்கணி
கூட்டமான படங்களையும், ரத்தினங்களையும் உள்ள சர்ப்பங்களைக் கைகளில் வளையல்களாகத் தரித்தவள், - குவடு குனித்துப் புரஞ்சு டுஞ்சின வஞ்சி
மேரு மலையை வில்லாக வளைத்து, திரிபுரத்தைச் சினத்துடன் எரித்த** வஞ்சிக் கொடி போன்றவள், - நீலி கலப விசித்ரச் சிகண்டி
நீல நிறத்தினள், தோகை மயிலின் அழகிய சாயலை உடையவள், - சுந்தரி கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி
பேரழகி, கொடிய விஷத்தைக் கழுத்திலே பொதிந்தவள்**, - கருணைவி ழிக்கற்பகம்
கருணை பொழியும் விழிகளை உடையவள், கேட்டவரம் நல்கும் கற்பகத் தரு, - திகம்பரி யெங்களாயி
திசைகளையே ஆடைகளாய் உடைய எங்கள் தாய், - கருதிய பத்தர்க்கிரங்கும் அம்பிகை
அவளை நினைத்த பக்தர்களுக்கு கருணை புரியும் அம்பிகை, - சுருதிதுதிக்கப் படுந்த்ரியம்பகி
வேதங்களால் போற்றப்படும் முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்னி) உடையவள்**, - கவுரிதிருக்கொட்டமர்ந்த
(இத்தனை பெருமைகளை உடைய) கெளரியாகிய காமாக்ஷியின் கோயிலாகிய திருக்கோட்டத்தில் (காஞ்சீபுரத்தில்) வீற்றிருப்போனே, - இந்திரர் தம்பிரானே.
தேவர்களுக்கெல்லாம் தலைவர்களான இந்திரர்கள் வணங்கும் பெருமாளே.



