திருப்புகழ் · 29அனிச்சம் கார்முகம் (திருச்செந்தூர்)

தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன ...... தனதான

Muruga Saranam

அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு
துவட்பஞ் சானத டாகம்வி டாமட
அனத்தின் தூவிகு லாவிய சீறடி ...... மடமானார்
அருக்கன் போலொளி வீசிய மாமர
கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம்
அழுத்தும் பாவியை யாவியி டேறிட ...... நெறிபாரா
வினைச்சண் டாளனை வீணணை நீணிதி
தனைக்கண் டானவ மானநிர் மூடனை
விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி ...... பகராதே
விகற்பங் கூறிடு மோகவி காரனை
அறத்தின் பாலொழு காதமு தேவியை
விளித்துன் பாதுகை நீதர நானருள் ...... பெறுவேனோ
முனைச்சங் கோலிடு நீலம கோததி
அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல
முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் ...... மருகோனே
முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி
திரைக்கங் காநதி தாதகி கூவிள
முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே
தினைச்செங் கானக வேடுவ ரானவர்
திகைத்தந் தோவென வேகணி யாகிய
திறற்கந் தாவளி நாயகி காமுறும் ...... எழில்வேலா
சிறக்குந் தாமரை யோடையில் மேடையில்
நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய
திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் ...... பெருமாளே.

பத உரை

  • அனிச்சம்
    அனிச்சம்* பூவைப்போல் மென்மை உடையதும்,
  • கார் முகம் வீசிட மாசு அறு துவள் பஞ்சான
    பஞ்சு அடிக்கும் வில்லால் அடிக்க மாசுகள் நீங்கிய துவளுகின்ற மென்பஞ்சைப் போன்றதும்,
  • தடாகம் விடா மட அனத்தின் தூவி
    நீர் நிலையை விடாது பற்றுவதுமான அழகிய அன்னப் பறவையின் மெல்லிய இறகு போன்றதுமான
  • குலாவிய சீறடி மடமானார்
    மிக மிருதுவான சிறிய பாதங்களும் உடைய இளம் மானொத்த விலைமாதர்களது
  • அருக்கன் போல ஒளி வீசிய மா மரகத பைம் பூண் அணி
    சூரியனைப் போல ஒளி வீசுகின்ற உயர்ந்த மரகதத்தைக் கொண்ட அழகிய அணிகலன்களை அணிந்த
  • வார் முலை மேல் முகம் அழுத்தும் பாவியை
    கச்சுடைய மார்பகங்களின் மேல் முகத்தை அழுத்துகின்ற பாவம் செய்த என்னை,
  • ஆவி இடேறிட நெறி பாரா வினைச் சண்டாளனை
    என் ஜன்மம் கடைத்தேறும் வழியை ஆராய்ந்து அறியாத பரம சண்டாளனை,
  • வீணனை நீள் நிதி தனைக் கண்டு ஆணவமான நிர்மூடனை
    வீணனை, பெரிய செல்வமுடைமையைக் கண்டு ஆணவம் கொண்ட முழு மூடனை,
  • விடக்கு அன்பாய் நுகர் பாழனை
    மாமிசத்தை ஆசையுடன் உண்கின்ற பாழானவனை,
  • ஓர் மொழி பகராதே விகற்பம் கூறிடு மோக விகாரனை
    ஒப்பற்ற சடாக்ஷர (சரவணபவ) மந்திரத்தைச் சொல்லாமல், சாஸ்திரத்திலிருந்து மாறுபட்ட பேச்சுக்களையே பேசுகின்ற காம விகாரனை,
  • அறத்தின் பால் ஒழுகாத மூதேவியை
    தர்ம வழியில் ஒழுகாத மூதேவியாகிய
  • என்னை, விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள் பெறுவேனோ
    (என் குற்றங்களை எல்லாம் பொறுத்து) என்னை அழைத்து உனது பாதுகையை நீ என் முடிமேல் சூட்ட நான் திருவருளைப் பெறுவேனோ?
  • முனைச் சங்கு ஓலிடு நீல மகா உததி
    போர்முனைக்கு உரிய சங்குகள் ஒலிக்கின்ற நீல நிறம் கொண்ட பெரிய கடலை
  • அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல முடிக்கு
    அடைத்து இலங்கைக்குப் பாலம் கட்டி, அஞ்சுதல் இல்லாத இராவணனுடைய நீண்ட பத்து முடிகளும் (வீழ),
  • அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே
    அன்று ஒப்பற்ற அம்பைச் செலுத்திய இராமனுடைய மருகனே,
  • முளைக்கும் சீத நிலாவொடு அரா
    திருப்பாற்கடலில் தோன்றும் குளிர்ந்த பிறைச் சந்திரனோடு, பாம்பையும்,
  • விரி திரை கங்கா நதி தாதகி கூவிள
    விசாலமானதும் அலைகளை உடையதுமான கங்கை நதியையும், ஆத்திப் பூவையும், வில்வத்தையும்
  • முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே
    ஜடாமுடியில் தரிக்கும் சிவபெருமானின் பேரருளால் தோன்றிய முருகோனே.
  • தினைச் செம் கானக வேடுவர் ஆனவர்
    (வள்ளிமலையிலிருந்த) தினைப் புனத்தில் வாழ்ந்த செழிப்பான காட்டு வேடர்கள்
  • திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய திறல் கந்தா
    திகைப்புற்று இதென்ன ஆச்சரியம் என்று கூறும்படியாக வேங்கை மரமாய் அவர்களின் முன் நின்ற திறமை வாய்ந்த கந்தனே,
  • வ(ள்)ளி நாயகி காமுறும் எழில் வேலா
    வள்ளி நாயகி கண்டு ஆசைப்படும் கட்டழகு உடைய வேலனே,
  • சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில்
    சிறந்த தாமரை ஓடையிலும், உயர்ந்த உப்பரிகையிலும்
  • நிறக்கும் சூல் வளை பால்மணி வீசிய
    நிறைந்த கர்ப்பம் கொண்ட சங்குகள் வெண்ணிறமுடைய முத்துக்களை அலைகள் அள்ளி வீசுகின்ற (கடற்கரை உள்ள)
  • திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே.
    திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பராக்கிரமசாலியே, தேவர்கள் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * அனிச்ச மலர் முகர்ந்தாலே வாடிவிடும் மென்மை வாய்ந்தது.
  • * anichcham flower is so soft that mere smelling would make it droop.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout