திருப்புகழ் · 284பெருக்க உபாயம் (திருத்தணிகை)

perukkaubAyam

தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்
ப்ரபுத்தன பாரங் ...... களிலேசம்
ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும்
ப்ரியக்கட லூடுந் ...... தணியாத
கருக்கட லூடுங் கதற்றும நேகங்
கலைக்கட லூடுஞ் ...... சுழலாதே
கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும்
கழற்புணை நீதந் ...... தருள்வாயே
தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்
சதுர்த்தச லோகங் ...... களும்வாழச்
சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்
சளப்பட மாவுந் ...... தனிவீழத்
திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ்
செருக்கு மயூரந் ...... தனில்வாழ்வே
சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • பெருக்க உபாயம் கருத்து உடையோர் தம் ப்ரபுத் தன பாரங்களிலே சம்ப்ரமத்துட(ன்) நாளும் ப்ரமித்து
    விரிவான தந்திரமான எண்ணங்கள் உடைய விலைமாதர்களின் மேன்மை விளங்கும் மார்பகங்களில் சிறப்புடன் தினந்தோறும் மயங்கித் திளைத்து,
  • இருள் கூரும் ப்ரியக் கடல் ஊடும் தணியாத கருக்கடல் ஊடும் கதற்றும் அநேகம் கலைக் கடல் ஊடும் சுழலாதே
    அஞ்ஞானம் மிக்க ஆசைக் கடல் உள்ளும், ஓய்வு இல்லாத பிறவிக் கடல் உள்ளும், கத்திப் படிக்கும் நூற்கடல் உள்ளும் நான் சுழற்சி அடைந்து வேதனை அடையாமல்,
  • கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே
    (இக் கடல்களைக் கடக்க) கடப்ப மலர் சேர்ந்துள்ள, கிண்கிணியின் ஒளி வீசும், திருவடியாகிய தெப்பத்தை நீ கொடுத்து அருள் புரிவாயாக.
  • தருக்கிய வேதன் சிறைப் பட நாளும் சதுர்த் தச லோகங்களும் வாழச் சமுத்திரம் ஏழும் குலக் கிரி ஏழும் சளப்பட மாவும் தனி வீழ
    செருக்கு மிக்க, வேதம் வல்ல பிரமன் சிறையில் அடைபடவும், நாள்தோறும் பதினான்கு உலகங்களும் வாழும்படியும், ஏழு கடல்களும் சிறந்த ஏழு மலைகளும் துன்பப்படவும், மாமரமாகிய சூரனும் தனித்து விழவும்,
  • திருக் கையில் வேல் ஒன்று எடுத்து அமர் ஆடும் செருக்கு மயூரம் தனில் வாழ்வே
    அழகிய கைகளில் ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்து போர் செய்தவனே, களிப்புற்ற மயில் ஏறும் செல்வமே,
  • சிறப்பொடு ஞானத் தமிழ் த்ரய(ம்) நீடும் திருத்தணி மேவும் பெருமாளே.
    சிறப்புற்ற ஞானமும், முத்தமிழும் விரிவாக விளங்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits