திருப்புகழ் · 212காமியத் தழுந்தி (சுவாமிமலை)

தானனத் தனந்த ...... தனதான
தானனத் தனந்த ...... தனதான

KaavadiTV

காமியத் தழுந்தி ...... யிளையாதே
காலர்கைப் படிந்து ...... மடியாதே
ஓமெழுத் திலன்பு ...... மிகவூறி
ஓவியத் திலந்த ...... மருள்வாயே
தூமமெய்க் கணிந்த ...... சுகலீலா
சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா
ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.

பத உரை

  • காமியத் தழுந்தி
    ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு
  • யிளையாதே
    மெலிந்து போகாமல்,
  • காலர்கைப் படிந்து
    யம தூதர்களின் கைகளிற் சிக்கி
  • மடியாதே
    இறந்து போகாமல்,
  • ஓமெழுத்தி லன்பு
    ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு
  • மிகவூறி
    மிகவும் ஏற்பட்டு,
  • ஓவியத்தி லந்தம்
    யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை (அடைய)
  • அருள்வாயே
    அருள்வாயாக.
  • தூமமெய்க் கணிந்த
    வாசனைப் புகையை மேனியில் அணிந்துள்ள
  • சுகலீலா
    சுகமான லீலைகளைப் புரியும் பெருமானே,
  • சூரனைக் கடிந்த கதிர்வேலா
    சூர சம்ஹாரம் செய்த ஒளி வேலனே,
  • ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
    பொன்மலையைப் போலச் சிறந்த மயிலில் ஏறும் வீரனே,
  • ஏரகத் தமர்ந்த பெருமாளே.
    திருவேரகம் என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout