திருப்புகழ் · 192வசனமிக ஏற்றி (பழநி)

தனதனன தாத்த ...... தனதான
தனதனன தாத்த ...... தனதான

Amutham Music

வசனமிக வேற்றி ...... மறவாதே
மனதுதுய ராற்றி ...... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
இகபரசெள பாக்ய ...... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.

பத உரை

  • வசனமிக ஏற்றி
    உருவேற ஏற மிகவும் ஜபம்செய்து
  • மறவாதே
    (அந்த ஜபத்தால்) உன்னை மறவாமல் இருந்து,
  • மனது துயர் ஆற்றில்
    என் மனம் துயரம் தரும் வழிகளில்
  • உழலாதே
    அலைந்து திரியாதிருக்கவும்
  • இசைபயில்
    மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற
  • ஷடாட்சரம் அதாலே
    ஆறெழுத்து மந்திரம் (சரவணபவ) தரும் பயனாலே
  • இகபரசெள பாக்யம்
    இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வை
  • அருள்வாயே
    அருள் புரிவாயாக
  • பசுபதிசி வாக்யம்
    சிவபிரானது வேத சிவாகமங்களை
  • உணர்வோனே
    அறிந்தவனே
  • பழனிமலை வீற்(று)
    பழனிமலையில் எழுந்தருளியிருந்து
  • அருளும் வேலா
    அருள் புரியும் வேலனே
  • அசுரர்கிளை வாட்டி
    அசுரர் கூட்டங்களை வாட்டி ஒடுக்கியும்,
  • மிகவாழ அமரர்
    தேவர்கள் நன்கு வாழும்படியாக
  • சிறை மீட்ட பெருமாளே.
    சிறையினின்று மீட்டுவித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout