தனதனன தந்த தத்த தானன
தனதனன தந்த தத்த தானன
தனதனன தந்த தத்த தானன ...... தனதான
நிகமமெனி லொன்று மற்று நாடொறு
நெருடுகவி கொண்டு வித்தை பேசிய
நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள ...... பெயர்கூறா
நெளியமுது தண்டு சத்ர சாமர
நிபிடமிட வந்து கைக்கு மோதிர
நெடுகியதி குண்ட லப்ர தாபமு ...... முடையோராய்
முகமுமொரு சம்பு மிக்க நூல்களு
முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்
முடிவிலவை யொன்று மற்று வேறொரு ...... நிறமாகி
முறியுமவர் தங்கள் வித்தை தானிது
முடியவுனை நின்று பத்தி யால்மிக
மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர ...... அருள்வாயே
திகுதிகென மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி யாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு ...... மமையாது
சிறியகர பங்க யத்து நீறொரு
தினையளவு சென்று பட்ட போதினில்
தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் ...... கழுவேற
மகிதலம ணைந்த அத்த யோனியை
வரைவறம ணந்து நித்த நீடருள்
வகைதனைய கன்றி ருக்கு மூடனை ...... மலரூபம்
வரவரம னந்தி கைத்த பாவியை
வழியடிமை கொண்டு மிக்க மாதவர்
வளர்பழநி வந்த கொற்ற வேலவ ...... பெருமாளே.
- நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி
கொண்டு வித்தை பேசிய
வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும் தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய - நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா
போலிக் கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களை வைத்துக்கொண்டு, - நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து
(தூக்குவோர்களுடைய முதுகு) நெளியத் தக்கக் கனத்த பல்லக்கு, குடை, சாமரம் (இவைகள் பரிசாகப் பெற்று) நெருங்கும்படியாக (உலவிக் கொண்டு) வந்து, - கைக்கு மோதிர நெடுகி அதி குண்டல ப்ரதாபமும்
உடையோராய்
கையில் மோதிரமும், (காதில்) நீண்டு தொங்கும் ஒளி மிக்க குண்டலங்களைத் தாங்கிய சிறப்பும் உடையவர்களாய், - முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து
இருக்குமோ எனில்
அவர்களது முகமானது, ஒரு செய்யுளும் வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும் விளக்கக் கூடுமோ என்று கேட்டால், - முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும்
அவர் தங்கள் வித்தை தான் இது
அவை ஒன்றும் தெரியாததால் வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம். - முடியவு(ம்) உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர்
செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே
(இத்தகைய கல்வி போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில் நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக. - திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று
பற்றி
திகுதிகு என்று கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அந்த நெடுஞ்செழியப் பாண்டியனுடைய உடலைச் சென்று (சுரப் பிணியாகப்) பற்றிட, - ஆருகர் திகையின் அமண் வந்து விட்ட போதினும்
அமையாது
பல திசைகளிலிருந்தும் சமணக் குருக்கள் வந்து முயன்ற போதிலும் சுரம் தணியாமல், - சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்ட
போதினில் தெளிய
(திருஞான சம்பந்தராக வந்த) உனது சிறிய தாமரைக் கரத்தினின்று, திருநீறு ஒரு தினை அளவு (பாண்டியன் மேல்) பட்டவுடனே சுரம் தணிய, - இனி வென்றி விட்ட மோழைகள் கழு ஏற மகிதலம்
அணைந்த அத்த
பின்பு (வாதப் போரில்) வெற்றியை இழந்த அந்த அறிவிலிகள் கழுவில் ஏற, இச்சாதனைகளுக்காக இந்தப் பூமியில் அவதரித்த குருவே, - யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள் வகை
தனை அகன்றி இருக்கும் மூடனை
பெண்களின் சிற்றின்பத்திலேயே கணக்கற்ற முறை ஈடுபட்டு, நாள்தோறும் (உனது) பேரருளின் திறங்களை உணராமல் விலகி நிற்கும் மூடனாகிய என்னை, - மல ரூபம் வர வர மனம் திகைத்த பாவியை வழி அடிமை
கொண்டு
ஆணவ மலம் நாளுக்கு நாள் மனத்தைக் கலக்கும் பாவியாகிய என்னை, வழி அடிமையாக ஆட்கொண்டு, - மிக்க மாதவர் வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே.
சிறந்த மகா தவசிகள் வாழும் பழனியில் வந்து அமர்ந்த வெற்றி வேலவப் பெருமாளே.