திருப்புகழ் 152 கோல குங்கும (பழநி)

தான தந்தன தத்தன தத்தம்
தான தந்தன தத்தன தத்தம்
தான தந்தன தத்தன தத்தம் ...... தனதான
கோல  குங்கும  கற்புர  மெட்டொன் 
றான  சந்தன  வித்துரு  மத்தின் 
கோவை  செண்பக  தட்பம  கிழ்ச்செங்  ......  கழுநீரின் 
கோதை  சங்கிலி  யுற்றக  ழுத்தும் 
பூஷ  ணம்பல  வொப்பனை  மெச்சுங் 
கூறு  கொண்டப  ணைத்தனம்  விற்கும்  ......  பொதுமாதர் 
பாலு  டன்கனி  சர்க்கரை  சுத்தந் 
தேனெ  னும்படி  மெத்தரு  சிக்கும் 
பாத  கம்பகர்  சொற்களி  லிட்டம்  ......  பயிலாமே 
பாத  பங்கய  முற்றிட  வுட்கொண் 
டோது  கின்றதி  ருப்புகழ்  நித்தம் 
பாடு  மன்பது  செய்ப்பதி  யிற்றந்  ......  தவனீயே 
தால  முன்புப  டைத்தப்ர  புச்சந் 
தேக  மின்றிம  திக்கவ  திர்க்குஞ் 
சாக  ரஞ்சுவ  றக்கிரி  யெட்டுந்  ......  தலைசாயச் 
சாடு  குன்றது  பொட்டெழ  மற்றுஞ் 
சூர  னும்பொடி  பட்டிட  யுத்தஞ் 
சாத  கஞ்செய்தி  ருக்கைவி  திர்க்குந்  ......  தனிவேலா 
ஆல  முண்டக  ழுத்தினி  லக்குந் 
தேவ  ரென்புநி  ரைத்தெரி  யிற்சென் 
றாடு  கின்றத  கப்பனு  கக்குங்  ......  குருநாதா 
ஆட  கம்புனை  பொற்குடம்  வைக்குங் 
கோபு  ரங்களி  னுச்சியு  டுத்தங் 
காவி  னன்குடி  வெற்பினி  னிற்கும்  ......  பெருமாளே. 
  • கோல குங்கும கற்புரம் எட்டு ஒன்று ஆன சந்தனம் வித்துருமத்தின் கோவை செண்பக தட்ப மகிழ் செங்கழு நீரின் கோதை சங்கிலி உற்ற கழுத்தும்
    அழகிய குங்குமம், பச்சைக் கற்பூரம், ஒன்பது மணிகள், தகுதியான சந்தனம், பவள மாலை, செண்பகப் பூ குளிர்ந்த மகிழம் பூ செங்கழு நீர்ப் பூ இவைகளால் ஆகிய பூமாலை, தங்கச் சங்கிலி இவைகள் விளங்கும் கழுத்தும்,
  • பூஷணம் பல ஒப்பனை மெச்சும் கூறு கொண்ட பணைத் தனம் விற்கும் பொதுமாதர்
    ஆபரணம், பல வித அலங்காரங்களையும், மெச்சும்படியாக அணிந்த, பருத்த மார்பகங்களை விற்கின்ற விலைமாதர்களின்
  • பாலுடன் கனி சர்க்கரை சுத்தந் தேன் எனும்படி மெத்த ருசிக்கும் பாதகம் பகர் சொற்களில் இட்டம் பயிலாமே
    பாலுடன் பழம், சர்க்கரை, சுத்தமான தேன் என்று சொல்லும்படியாக மிகவும் ருசிக்கின்றவையும், பாவமே தருகின்றவையுமான சொற்களில் ஆசை வைக்காமல்,
  • பாத பங்கயம் உற்றிட உள் கொண்டு ஓதுகின்ற திருப்புகழ் நித்தம் பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே
    உனது திருவடித் தாமரைகளை அடைய உள்ளத்தில் எண்ணம் கொண்டு நான் கூறி வரும் திருப்புகழ்ப் பாடல்களை தினந்தோறும் பாட வேண்டும் என்ற அன்பை வயலூரில் (எனக்குத்) தந்தவன் நீ தான்.
  • தாலம் முன்பு படைத்த ப்ரபுச் சந்தேகம் இன்றி மதிக்க அதிர்க்கும் சாகரம் சுவறக் கிரி எட்டும் தலை சாய
    உலகத்தை முன்பு படைத்த மேலான பிரம தேவன் ஐயம் தீர்ந்து (பிரணவப் பொருளை உம்மால் அறிந்தேன் என்று) மதிக்கவும், ஒலிக்கின்ற கடல் வற்றிப் போகவும், எண் திசைகளில் உள்ள மலைகளும் நிலை குலையவும்,
  • சாடு குன்று அது பொட்டு எழ மற்றும் சூரனும் பொடி பட்டிட யுத்தம் சாதகம் செய் திருக்கை விதிர்க்கும் தனி வேலா
    பலரையும் வஞ்சனையால் கொன்ற கிரெளஞ்ச மலை தூளாகி விழவும், மேலும் சூரனும் பொடிபடவும், போரில் பயிற்சி கொண்ட திருக்கரத்தை அசையச் செலுத்திய ஒப்பற்ற வேலை உடையவனே,
  • ஆலம் உண்ட கழுத்தினில் அக்கும் தேவர் என்பு நிரைத்து எரியில் சென்று ஆடுகின்ற தகப்பன் உகக்கும் குருநாதா
    ஆலகால விஷத்தை உண்ட கழுத்தில் ருத்திராட்ச மாலையும் தேவர்களுடைய எலும்பு மாலையும் வரிசையாகத் தரித்து, சுடுகாட்டு நெருப்பின் எதிரில் போய் ஆடுகின்ற தந்தையாகிய சிவபெருமானும் மகிழ்கின்ற குரு நாதனே,
  • ஆடகம் புனை பொன் குடம் வைக்கும் கோபுரங்களின் உச்சி உடுத் தங்கும் ஆவினன்குடி வெற்பினில் நிற்கும் பெருமாளே.
    பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கலசங்கள் வைத்துள்ள கோபுரங்களின் உச்சியில் நட்சத்திரங்கள் தங்குகின்ற திருவாவினன்குடி மலையில் நின்று விளங்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com