திருப்புகழ் 150 குன்றுங் குன்றும் (பழநி)

தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
தனதன தனதன தனதன தனதன
தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
குன்றுங்  குன்றுஞ்  செண்டுங்  கன்றும் 
படிவளர்  முலையினில்  ம்ருகமத  மெழுகியர் 
இந்துஞ்  சந்தந்  தங்குந்  தண்செங் 
கமலமு  மெனவொளிர்  தருமுக  வநிதையர் 
கொஞ்சுங்  கெஞ்சுஞ்  செஞ்சும்  வஞ்சஞ் 
சமரச  முறவொரு  தொழில்வினை  புரிபவர்  ......  விரகாலும் 
கும்பும்  பம்புஞ்  சொம்புந்  தெம்புங் 
குடியென  வளர்தரு  கொடியவர்  கடியவர் 
எங்கெங்  கெம்பங்  கென்றென்  றென்றுந் 
தனதுரி  மையதென  நலமுட  னணைபவர் 
கொஞ்சந்  தங்கின்  பந்தந்  தெந்தன் 
பொருளுள  தெவைகளு  நயமொடு  கவர்பவர்  ......  மயலாலும் 
என்றென்  றுங்கன்  றுந்துன்  புங்கொண் 
டுனதிரு  மலரடி  பரவிட  மனதினில் 
நன்றென்  றுங்கொண்  டென்றுஞ்  சென்றுந் 
தொழுமகி  மையினிலை  யுணர்வினி  னருள்பெற 
இன்பும்  பண்புந்  தெம்புஞ்  சம்பந் 
தமுமிக  வருள்பெற  விடைதரு  விதமுன  ......  மருள்வாயே 
எங்குங்  கஞ்சன்  வஞ்சன்  கொஞ்சன் 
அவன்விடு  மதிசய  வினையுறு  மலகையை 
வென்றுங்  கொன்றுந்  துண்டந்  துண்டஞ் 
செயுமரி  யொருமுறை  யிரணிய  வலனுயிர் 
நுங்குஞ்  சிங்கம்  வங்கந்  தன்கண் 
துயில்பவ  னெகினனை  யுதவிய  கருமுகில்  ......  மருகோனே 
ஒன்றென்  றென்றுந்  துன்றுங்  குன்றுந் 
தொளைபட  மதகரி  முகனுடல்  நெரிபட 
டுண்டுண்  டுண்டுண்  டிண்டிண்  டிண்டிண் 
டிடியென  விழுமெழு  படிகளு  மதிர்பட 
ஒண்சங்  கஞ்சஞ்  சஞ்சஞ்  சஞ்சென் 
றொலிசெய  மகபதி  துதிசெய  அசுரரை  ......  யடுவோனே 
உந்தன்  தஞ்சந்  தஞ்சந்  தஞ்சஞ் 
சிவனருள்  குருபர  வெனமுநி  வரர்பணி 
யுந்தொந்  தந்தொந்  தந்தொந்  தந்தென் 
றொலிபட  நடமிடு  பரனரு  ளறுமுக 
உண்கண்  வண்டுங்  கொண்டுந்  தங்கும் 
விரைபடு  குரவல  ரலர்தரு  மெழில்புனை  ......  புயவீரா 
அன்றென்  றொன்றுங்  கொண்டன்  பின்றங் 
கடியவர்  தமையிகழ்  சமணர்கள்  கழுவினில் 
அங்கஞ்  சிந்தும்  பங்கந்  துஞ்சும் 
படியொரு  தொகுதியி  னுரைநதி  யெதிர்பட 
அன்பின்  பண்பெங்  குங்கண்  டென்பின் 
அரிவையை  யெதிர்வர  விடுகவி  புகல்தரு  ......  திறலோனே 
அண்டங்  கண்டும்  பண்டுண்  டும்பொங் 
கமர்தனில்  விஜயவ  னிரதமை  நடவிய 
துங்கன்  வஞ்சன்  சங்கன்  மைந்தன் 
தருமகன்  முநிதழல்  வருதக  ரிவர்வல 
அங்கங்  கஞ்சஞ்  சங்கம்  பொங்குங் 
கயநிறை  வளமுறு  சிவகிரி  மருவிய  ......  பெருமாளே. 
  • குன்றும் குன்றும் செண்டும் கன்றும் படி வளர் முலையினில் ம்ருகமதம் மெழுகியர்
    மலையும் வளர்ச்சி குறைந்து இருக்கும்படியும், பூச்செண்டும் வாடும்படியாகவும் வளர்ந்த மார்பகத்தில் கஸ்தூரிக் கலவை பூண்பவர்.
  • இந்தும் சந்த(ம்) தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர்
    சந்திரனைப் போலவும் அழகு தங்கும் குளிர்ச்சியும் சிவப்பு நிறமும் பொருந்திய தாமரை போன்று விளங்கும் முகத்தைக் கொண்ட (விலை) மாதர்கள்.
  • கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு தொழில் வினை புரிபவர்
    கொஞ்சுதலும், கெஞ்சிக் கேட்பதும் செய்தும், வஞ்சகமாக, சமாதானம் வரும்படி, ஒப்பற்ற செயல்களைப் புரியும் மாதர்.
  • விரகாலும் கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர்
    சூழ்ச்சியாலும், கும்பல் கூடியிருத்தலும், வேடிக்கையும், அழகும், ஆணவமும் (இக்குணங்கள்) தம்முள் குடிவளர்த்துள்ள பொல்லாதவர்கள். கடுமையானவர்கள்.
  • எங்கு எங்கு எம் பங்கு என்று என்று என்றும் தனது உரிமை அது என நலமுடன் அணைபவர்
    எங்கே, எங்கே எமக்கு உரிய பங்கு என்று கூறி, எப்போதும் தமக்குச் சொந்தமானது என்று நிலை நிறுத்தி, பின் நலம் பேசி அணைபவர்.
  • கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன் பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர்
    கொஞ்சமே உள்ள இன்பத்தைக் கொடுத்து என்னிடம் உள்ள பொருள் அனைத்தையும் சாமர்த்தியமாக கவர்ந்து கொள்பவர்கள்.
  • மயலாலும் என்றென்றும் கன்றும் துன்பம் கொண்டு உனது இருமலர் அடி பரவிட மனதினில் நன்று என்றும் கொண்டு என்றும் சென்றும் தொழு(ம்) மகிமையின் நிலை உணர்வில் நின் அருள் பெற
    காம இச்சையாலும், எந்த நாளும் மனம் இரங்கி நொந்து போதலையும், துன்பத்தையும் கொண்டுள்ள நான் உனது மலர் போன்ற இரு திருவடியை போற்றுதற்கும், மனத்தில் நல்லது என்று எப்பொழுதும் அறிந்து என்றும் (உன் திருக்கோயிலுக்குச்) சென்று தொழுகின்ற பெருமையின் பண்பை என் அறிவில் நின் அருளால் நான் பெறவும்,
  • இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள் பெற விடை தரு விதம் மு(ன்)னம் அருள்வாயே
    இன்பமும் நற்பண்பும் உற்சாகமும் உனது தொடர்பும் சேர்ந்து நிரம்பும்படியான அருளைப் பெறவும் நீ அனுமதி செய்யும் வழியை முன்னதாகக் காட்டி அருள் புரிவாயாக.
  • எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை வென்றும் கொன்றும் துண்டம் துண்டம் செயும் அரி
    பயத்தால் ஏங்கிய கம்சன் வஞ்சகன், அற்பன். (கண்ணனைக் கொல்லும் பொருட்டு) அவன் ஏவிய அதிசயமான செயலை உடைய (பூதனை என்ற) பேயை வெற்றி கொண்டு, கொன்று, துண்டம் துண்டமாகச் செய்த திருமால்,
  • ஒரு முறை இரணிய வலன் உயிர் நுங்கும் சிங்கம் வங்கம் தன் கண் துயில்பவன் எகினனை உதவிய கரு முகில் மருகோனே
    ஒரு காலத்தில் இரணியன் என்னும் வலியவனுடைய உயிரை உண்ட நரசிங்க வடிவினர், ஆதிசேஷனாகிய தோணி மேல் (பாற்கடலில்) துயில் கொள்பவர், அன்ன வாகனனாகிய பிரம தேவனைப் பெற்ற கரிய மேக நிறம் கொண்ட திருமாலின் மருகனே,
  • ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட
    நிகரில்லாத சூரிய மண்டலம் வரை உயர்ந்து நின்ற கிரெளஞ்ச மலை பிளக்கும்படியும், மதம் பொழியும் யானை முகமுடைய தாரகாசுரனது உடம்பு நெரிபட்டு அழியவும்,
  • டுண் டுண் டுண் டுண் டிண் டிண் டிண் டிண் டிடி யென விழும் எழு படிகளும் அதிர்பட ஒண் சங்கம் சஞ் சஞ் சஞ் சஞ் சென்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே
    டுண் டுண் டுண் டுண் டிண் டிண் டிண் டிண் டிடி என்ற ஒலியுடன், விழும்படியான நிலையில் இருந்த ஏழு உலகங்களும் அதிர்ச்சி கொள்ளவும், ஒள்ளிய சங்கம் சஞ்சம் சஞ்சம் என்று ஒலிக்கவும், இந்திரன் வணங்கவும் அசுரர்களை மாய்த்தவனே,
  • உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலி பட நடம் இடு பரன் அருள் அறுமுக
    நீயே முக்காலும் அடைக்கலம், சிவனுக்கு அருளிய ஞான மூர்த்தியே என்று முனிவர்கள் பணியும், தொம்தம் தொம்தம் என்ற தாளத்தோடு ஒலி பரவ நடம் செய்யும் சிவபெருமான் அருளிய ஆறுமுகனே,
  • உண் கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர் தரும் எழில் புனை புய வீரா
    தேன் உண்ணுகிற இடத்தில் வண்டுகளைக் கொண்டு விளங்க, வாசனை வீசுகின்ற குரா மலர்கள் மலரும், அழகு செய்கின்ற தோள்களை உடைய வீரனே,
  • அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர் தமை இகழ் சமணர்கள் கழுவினில் அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும் படி
    பிற மதங்கள் முக்தி வழி அன்று என்று கூறி தங்கள் நெறி ஒன்றையே கொண்டு அன்பு இல்லாமல் அங்கு அடியவர்களை இகழ்ந்து பேசிய சமணர்களை கழுவில் அவர்கள் உடல் சிந்தும்படியும், குறைபட்டு மாளும்படியும் செய்து,
  • ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர் வர விடு கவி புகல் தரு திறலோனே
    ஒரே வெள்ளமாய் நுரைத்து வந்த வைகையாற்றில் ஏடுகள் எதிர் வரச் செய்து, (அத்தகைய செயல்களால்) சிவத்தின் தன்மையை எங்கும் பரவச் செய்து, எலும்பிலிருந்து பூம்பாவையை எதிரில் உயிரோடு வரும்படி செய்த கவி பாடிய திருஞானசம்பந்தராக வந்து தேவார திருப்பதிகத்தைத் திருவாய் மலர்ந்து அருளிய சமர்த்தனே,
  • அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர் தனில் விஜயவன் இரதமை நடவிய துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல
    அண்டங்களை உண்டாக்கியும், முன்னொரு நாளில் அவற்றை உண்டும், முடுகி வந்த போரில் அருச்சுனனின் ரதத்தைத் (தேர்ப் பாகனாக வந்து) செலுத்திய பரிசுத்த மூர்த்தி, தீயாரை வஞ்சம் புரிந்து அழிப்பவரும், பாஞ்ச ஜன்யம் என்ற சங்கை உடையவரும் ஆகிய திருமாலின் புதல்வராகிய பிரம்ம தேவருடைய புத்திரரான நாரத முனிவர் புரிந்த வேள்வியில் பிறந்த ஆட்டுக் கடாவின் மீது ஏறுகின்ற வல்லவனே,
  • அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும் கய(ம்) நிறை வளம் உறு சிவகிரி மருவிய பெருமாளே.
    தமது அடையாள உறுப்பாக தாமரையும், சங்கும் பொலிந்து விளங்கும் தடாகங்கள் நிறைந்த வளப்பம் பொருந்திய சிவ கிரியாகிய பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com