திருப்புகழ் · 144கார் அணிந்த (பழநி)

தான தந்ததனத் தான தந்ததனத்
தான தந்ததனத் ...... தனதான

Thiruppugazh Piththan

கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்
காதல் நெஞ்சயரத் ...... தடுமாறிக்
கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க்
காய மொன்றுபொறுத் ...... தடியேனும்
தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச்
சாப மொன்றுநுதற் ...... கொடியார்தம்
தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்
தாழ்வ டைந்துலையத் ...... தகுமோதான்
சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத்
தோய முஞ்சுவறப் ...... பொரும்வேலா
தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்
சூழ்பெ ருங்கிரியிற் ...... றிரிவோனே
ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற்
றால முண்டவருக் ...... குரியோனே
ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற்
றாவி னன்குடியிற் ...... பெருமாளே.

பத உரை

  • கார் அணிந்த வரைப் பார் அடர்ந்து
    மேகங்களை அணிந்த மலைகளுடன் கூடிய இப் பூமியில் பிறந்து,
  • வினைக் காதல் நெஞ்சு அயரத் தடுமாறி
    வினைகளைப் பெருக்கும் காதலினால் உள்ளம் சோர்ந்து, தடுமாற்றம் கொண்டு,
  • கால் நரம்பு உதிரத் தோல் வழும்பு உறு பொய்க் காயம் ஒன்று பொறுத்து அடியேனும்
    வாயு, நரம்பு, இரத்தம், தோல், கொழுப்பு இவைகளோடு கூடிய பொய்யான உடல் ஒன்றினைச் சுமந்து அடியேனாகிய நான்,
  • தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழிச் சாபம் ஒன்று நுதல் கொடியார் தம்
    மாலை சேர்ந்த கூந்தலையும், கூர்மையான கண்களையும், வில்லுக்கு ஒப்பான நெற்றியையும் உடைய கொடி போன்ற பொதுமகளிருடைய
  • தாள் பணிந்து அவர் பொன் தோள் விரும்பி மிகத் தாழ்வு அடைந்து உலையத் தகுமோ தான்
    பாதங்களை வணங்கி, அவர்களுடைய அழகிய தோள்களின் மேல் ஆசைப்பட்டு, மிகவும் கீழான நிலையை அடைந்து, அழிந்து போகத் தக்கதாமோ?
  • சூரன் அங்கம் விழத் தேவர் நின்று தொழத் தோயமும் சுவறப் பொரும் வேலா
    சூரனுடைய உடல் அழிந்து போக, தேவர்கள் நின்று போற்ற, கடலும் வற்றிப்போக, சண்டை செய்யும் வேலனே,
  • தூய்மை கொண்ட குறத் தோகை நின்ற புனம் சூழ் பெரும் கிரியில் திரிவோனே
    பரிசுத்தம் கொண்ட மயில் போன்ற வள்ளி நின்ற, தினைப் புனங்கள் சூழ்ந்த வள்ளிமலையில் திரிகின்றவனே,
  • ஆரணன் கருடக் கேதனன் தொழ முற்று ஆலம் உண்டவருக்கு உரியோனே
    பிரமன், கருடக் கொடியையுடைய திருமால் இருவரும் வணங்க, ஆலகால விஷம் முழுவதையும் உண்ட சிவபெருமானுக்கு உரியவனே,
  • ஆலையும் பழனச் சோலையும் புடை சுற்று ஆவினன்குடியிற் பெருமாளே.
    கரும்பு ஆலைகளும், வயல்களும், சோலைகளும் பக்கங்களில் சூழ்ந்துள்ள திருவாவினன்குடியில் (பழநியில்) வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout