திருப்புகழ் 141 கனக கும்பம் (பழநி)

தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன ...... தந்ததான
கனக  கும்பமி  ரண்டு  நேர்மலை 
யெனநெ  ருங்குகு  ரும்பை  மாமணி 
கதிர்சி  றந்தவ  டங்கு  லாவிய  ......  முந்துசூதம் 
கடையில்  நின்றுப  ரந்து  நாடொறு 
மிளகி  விஞ்சியெ  ழுந்த  கோமள 
களப  குங்கும  கொங்கை  யானையை  ......  யின்பமாக 
அனைவ  ருங்கொளு  மென்று  மேவிலை 
யிடும  டந்தையர்  தங்கள்  தோதக 
மதின்ம  ருண்டுது  வண்ட  வாசையில்  ......  நைந்துபாயல் 
அவச  மன்கொளு  மின்ப  சாகர 
முழுகும்  வஞ்சக  நெஞ்சை  யேயொழி 
தருப  தங்கதி  யெம்பி  ரானருள்  ......  தந்திடாயோ 
தனத  னந்தன  தந்த  னாவென 
டிகுகு  டிங்குகு  டிங்கு  பேரிகை 
தகுதி  திந்திகு  திந்த  தோவென  ......  வுந்துதாளந் 
தமர  சஞ்சலி  சஞ்ச  லாவென 
முழவு  டுண்டுடு  டுண்டு  டூவென 
தருண  கிண்கிணி  கிண்கி  ணாரமு  ......  முந்தவோதும் 
பணிப  தங்கய  மெண்டி  சாமுக 
கரிய  டங்கலு  மண்ட  கோளகை 
பதறி  நின்றிட  நின்று  தோதக  ......  என்றுதோகை 
பவுரி  கொண்டிட  மண்டி  யேவரு 
நிசிச  ரன்கிளை  கொன்ற  வேலவ 
பழநி  யங்கிரி  யின்கண்  மேவிய  ......  தம்பிரானே. 
  • கனக கும்பம் இரண்டும் நேர் மலை என நெருங்கு குரும்பை மா மணி கதிர் சிறந்த வடம் குலாவிய முந்து சூதம்
    இரண்டு பொன் குடத்துக்கு ஒப்பான மலைக்கு நிகர் என்று கூறும்படி நெருங்கியுள்ள இள நீர் குரும்பைப் போன்று, அழகிய மணிகள் ஒளி சிறந்த மாலைகளில் விளங்கினவாய், முற்பட்ட சூதாடு கருவிகளைப் போன்ற மார்பகங்களுடன்,
  • கடையில் நின்று பரந்து நாள் தொறும் இளகி விஞ்சி எழுந்த கோமள களப குங்கும கொங்கை யானையை இன்பமாக அனைவரும் கொளும் என்றுமே விலை இடும் மடந்தையர்
    வீட்டு வாயிலில் நின்று யாரை வசப்படுத்தலாம் என்ற பரபரப்பு கொண்டு, ஒவ்வொரு நாளும், இளகி மேல் எழுந்துள்ள அழகிய கலவைச் சாந்து அணிந்த குங்குமம் விளங்கும் யானையைப் போன்ற மார்பகங்களை இன்பத்துடன் எல்லாரும் கொள்ளுங்கள் என்று விலைக்கு விற்கும் விலைமாதர்களுடைய
  • தங்கள் தோதகம் அதின் மருண்டு துவண்டு அ(வ்)வாசையில் நைந்து பாயல் அவசம் மன் கொளும் இன்ப சாகர(ம்) முழுகும் வஞ்சக நெஞ்சையே ஒழி தரு(ம்) பதம் கதி எம்பிரான் அருள் தந்திடாயோ
    மாய்மாலச் செயலில் மயங்கி வாடி, உள்ளம் நசுங்கி, படுக்கையில் பரவசம் போன்ற மயக்கத்தை அதிகமாகக் கொள்ளும் இன்பக் கடலில் முழுகும் வஞ்சக மனத்தைத் தொலைக்கவல்ல உனது திருவடியாகிய புகலிடத்தை, எம்பிரானே, நீ அருளமாட்டாயோ?
  • தனதனந்தன தந்தனாவென டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை தகுதி திந்திகு திந்த தோவென உந்து தாளம் தமர சஞ்சலி சஞ்சலா என
    பேரிகை தனதனந்தன தந்தனா டிகுகு டிங்குகு டிங்கு என்று முழங்க, வீச்சுடன் தாளவாத்தியங்கள் தகுதி திந்திகு திந்த தோவென்று சப்திக்க, டமருகம் என்ற வாத்தியம் சஞ்சலி சஞ்சலா என்று ஒலிக்க,
  • முழவு டுண்டுடு டுண்டு டூவென தருண கிண்கிணி கிண்கிண் ஆரமு(ம்) முந்த ஓதும்
    முரசு டுண்டுடு டுண்டு டூவென்று அடிக்கப்பட, சிறிய சதங்கை கிண்கிண் என்று முற்பட்டு ஒலிக்க,
  • பணி பதம் கயம் எண் திசாமுக கரி அடங்கலும் அண்ட கோளகை பதறி நின்றிட நின்று தோ தக என்று தோகை பவுரி கொண்டிட
    பாம்பைத் தனது பாதத்தில் பூண்டதாய், எட்டு திசைகளில் உள்ள யானைகள் யாவும், உருண்டை வடிவமான அண்டங்களும் நடுங்கி நிற்கவும், தோகை மயில் தோ தக என்ற ஒலிக் குறிப்புடன் நடனம் புரிய,
  • மண்டியே வரும் நிசிசரன் கிளை கொன்ற வேலவ பழநி அம் கிரியின் கண் மேவிய தம்பிரானே.
    நெருங்கி வந்த அசுரனாகிய சூரனது கூட்டத்தைக் கொன்ற வேலவனே, அழகிய பழனி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com