திருப்புகழ் 138 கலை கொடு (பழநி)

தனதனன தத்த தான தனதனன தத்த தான
தனதனன தத்த தான ...... தனதான
கலைகொடுப  வுத்தர்  காம  கருமிகள்து  ருக்கர்  மாய 
கபிலர்பக  ரக்க  ணாதர்  ......  உலகாயர் 
கலகமிடு  தர்க்கர்  வாம  பயிரவர்வி  ருத்த  ரோடு 
கலகலென  மிக்க  நூல்க  ......  ளதனாலே 
சிலுகியெதிர்  குத்தி  வாது  செயவுமொரு  வர்க்கு  நீதி 
தெரிவரிய  சித்தி  யான  ......  வுபதேசந் 
தெரிதரவி  ளக்கி  ஞான  தரிசநம  ளித்து  வீறு 
திருவடியெ  னக்கு  நேர்வ  ......  தொருநாளே 
கொலையுறஎ  திர்த்த  கோர  இபமுகஅ  ரக்க  னோடு 
குரகதமு  கத்தர்  சீய  ......  முகவீரர் 
குறையுடலெ  டுத்து  வீசி  யலகையொடு  பத்ர  காளி 
குலவியிட  வெற்றி  வேலை  ......  விடுவோனே 
பலமிகுபு  னத்து  லாவு  குறவநிதை  சித்ர  பார 
பரிமளத  னத்தில்  மேவு  ......  மணிமார்பா 
படைபொருது  மிக்க  யூக  மழைமுகிலை  யொட்டி  யேறு 
பழநிமலை  யுற்ற  தேவர்  ......  பெருமாளே. 
  • கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய
    தாம் கற்ற கலைகளைக் கொண்டு, பெளத்தர்களும், விருப்பமான கிரியைகளைச் செய்வதே நியதி என்று கருதும் கருமவாதிகளும், முகமதியர்களும், மாயாவாதிகளும்,
  • கபிலர் பகர் அக்கணாதர் உலகாயர்
    கபில முனிவர் நிறுவிய சாங்கியர்களும், சொல்லப்பட்ட அந்தக் காணாபத்யர்களும், உலகாயதர்களாகிய சமூகவாதிகளும்,
  • கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு
    கலகம் புரியும் தர்க்கவாதிகளான வாம மதத்தினரும், பைரவர்களும், தம்முடன் மாறுபட்ட கொள்கையுடன்
  • கலகல என மிக்க நூல்கள் அதனாலே சிலுகி எதிர் குத்தி வாது செயவும்
    சத்தத்துடன் அதிக விதமான நூல்களின் மேற் கோள்களுடன் சண்டை இட்டு, எதிர் தாக்கி வாது செய்தாலும்,
  • ஒருவர்க்கு(ம்) நீதி தெரிவரிய சித்தியான உபதேசம்
    ஒருவருக்குமே உண்மை இதுதான் என்று தெரிதற்கு அரிதான, வீடு தரும் பொருளான உபதேசத்தை,
  • தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே
    யான் அறியும்படி விளக்கி ஞான தரிசனத்தையும் அருளி, மேம்பட்ட உனது திருவடியை எனக்குத் தந்தருளும் நாள் உண்டோ?
  • கொலை உற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு
    கொலைகள் நேரும்படியாக எதிர்த்து வந்த கோரமான யானை முகமுடைய தாரகாசுரனுடன்
  • குரகத முகத்தர் சீய முக வீரர் குறை உடல் எடுத்து வீசி
    குதிரை முகமுடையவர்கள், சிங்க முகம் உடையவர்கள் ஆகிய பல அசுர வீரர்களின் குறைபட்ட உடலை எடுத்து வீசி எறிந்து,
  • அலகையொடு பத்ர காளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே
    பேயும் பத்ர காளியும் மகிழ்ச்சி அடைந்து வாயால் குலவை ஒலி (நாவை உதடுகளுக்கு இடையே வேகமாக அசைத்து எழுப்பும் ஒலியை) எழுப்ப, வெற்றி வேலைச் செலுத்தியவனே,
  • பலம் மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணிமார்பா
    நல்ல விளைச்சல் இருந்த தினைப் புனத்தில் உலாவுகின்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் அழகிய, கனத்த, வாசனையுடன் கூடிய மார்பினைத் தழுவிய அழகிய மார்பனே,
  • படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே.
    ஒன்றோடொன்று போர் செய்து கொண்டு மிக்கெழுந்த பெண் குரங்குகள் மழை பொழியும் மேகத்தைக் கண்டு அஞ்சி ஏறி ஒளிந்து கொள்ளும் பழனி மலையில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com