தந்த தனந்த தனத்த தானன
தந்த தனந்த தனத்த தானன
தந்த தனந்த தனத்த தானன ...... தனதானா
தங்க மிகுந்த முலைக்க டாமலை
பொங்க விரும்பி யமுத்து மாலைகள்
தங்க அணிந்து முறுக்கும் வேசியர் ...... மொழியாலே
சஞ்ச லமிஞ்சி மயக்கி யேஒரு
மஞ்ச மிருந்து சுகிக்க வேவளர்
சந்து சுகந்த முடித்து நூலிடை ...... கிடையாடக்
கொங்கை குலுங்க வளைத்து வாயத
ரங்க ளருந்தி ருசிக்க வேமத
குங்கு மமிஞ்சு கழுத்தி லேகுயி ...... லெனஓசை
கொண்ட வரிந்த விதத்தி னாடர
சங்கி லிகொண்டு பிணித்து மாமயில்
கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் ...... உறவாமோ
திங்கள் அரும்பு சலத்தி லேவிடம்
வந்த துகண்டு பயப்ப டாதவர்
சிந்தை நடுங்கி இருக்க வேமயில் ...... மிசையேறிச்
சிங்க முகன்த லைவெட்டி மாமுகன்
அங்க மறுந்து கிடக்க வேவரு
சிம்பு ளெனும்ப டிவிட்ட வேலுள ...... குருநாதா
மங்கை மடந்தை கதிக்கு நாயகி
சங்க ரிசுந்த ரிஅத்தி யானனை
மைந்த னெனும்ப டிபெற்ற ஈசுரி ...... தருபாலா
மந்தி ரதந்தி ரமுத்த யோகியர்
அஞ்ச லிசெங்கை முடிக்க வேஅருள்
வந்து தரும்ப டிநித்த மாடிய ...... பெருமாளே.
- தங்க(ம்) மிகுந்த முலைக் கடாமலை பொங்க விரும்பிய
முத்து மாலைகள் தங்க அணிந்து முறுக்கும் வேசியர்
பொன்னணிகள் மிக்கணிந்து, கடக்கமுடியா மலை போல விம்மிப் பெருகிய மார்பகத்தில் ஆசையுடன் அணிந்த முத்து மாலைகள் தங்கும்படியாக, கர்வத்தைக் காட்டும் விலை மகளிர். - மொழியாலே சஞ்சல(ம்) மிஞ்சி மயக்கியே ஒரு மஞ்சம்
இருந்து சுகிக்கவே வளர் சந்து சுகந்த முடித்து
தங்கள் பேச்சினால் வந்தவரை மிகச் சஞ்சலம் அடையச் செய்து மயங்கவைத்து, ஒரு கட்டிலில் அவர்களுடன் சுகித்து இருந்து, மிகுந்த நறுமணம் உள்ள சந்தனத்தை அப்பி மகிழ்ந்து, நூலைப் போன்ற மெலிந்த இடுப்பு படுக்கையில் அசைவுற, - நூலிடை கிடையாட கொங்கை குலுங்க வளைத்து வாய்
அதரங்கள் அருந்தி ருசிக்கவே மத குங்குமம் மிஞ்சு
கழுத்திலே குயிலென ஓசை கொண்டவர் இந்த விதத்தின்
ஆடர
அவர்களது மார்பகங்கள் குலுங்க, கழுத்தை வளைத்து, வந்தவரின் வாயிதழ்களைச் சுவைத்து ருசிக்க, மோகத்தை மூட்டும் குங்குமக் கலவை பூசிய கழுத்திலிருந்து குயிலின் ஓசையை வெளிப்படுத்தும் விலை மகளிர் இந்த விதமாக ஆடிட, - சங்கிலி கொண்டு பிணித்து மாமயில் கொஞ்சி மகிழ்ந்த
வறட்டு வீணியர் உறவாமோ
தங்கள் கழுத்திலுள்ள சங்கிலியால் பிணித்து, அழகிய மயில் போல கொஞ்சி மகிழும் இந்த வறட்டு கர்வம் உடைய வீணிகளின் உறவு நல்லதாகுமா? - திங்கள் அரும்பு சலத்திலே விடம் வந்தது கண்டு
பயப்படாதவர் சிந்தை நடுங்கி இருக்கவே
சந்திரன் பிறந்த பாற்கடலில் ஆலகால விஷம் எழுந்தபோது அதைக் கண்டு சிறிதும் பயப்படாதவராகிய சிவபெருமான் (சூரனைக் கண்டு) மனம் நடுங்கி இருந்தபோது, - மயில் மிசையேறிச் சிங்க முகன் தலைவெட்டி மாமுகன்
அங்கம் அறுந்து கிடக்கவே வரு சிம்புள் எனும்படிவிட்ட
வேலுள குருநாதா
உனது மயில் மீது ஏறி சிங்கமுகாசுரன் சிரத்தை வெட்டி, தாரகாசுரன் உடலின் அங்கங்களை அறுத்தெறிந்து, பாய்கின்ற சரபப் பக்ஷி போலச் சென்ற வேலினை உடைய குருநாதனே, - மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்கரி சுந்தரி
அத்தியானனை மைந்தன் எனும்படி பெற்ற ஈசுரி தருபாலா
தெய்வ மங்கை, மடந்தை, மோட்ச கதிக்கு நாயகி, சங்கரி, பேரழகி, யானை முகத்தவனாகிய கணபதியை மகனாகப் பெற்ற ஈஸ்வரி பார்வதி அருளிய பாலனே, - மந்திர தந்திர முத்த யோகியர் அஞ்சலி செங்கை முடிக்கவே
அருள் வந்து தரும்படி நித்தமாடிய பெருமாளே.
மந்திர, தந்திரங்களில் வல்ல, முற்றும் துறந்த யோகியர் தங்களது செங்கைகளை சிரம் மீது கூப்பி அஞ்சலி செய்ய, அவர்களுக்கு கருணையுடன் அருள் பாலித்து அவர்களின் முன்வந்து (குடைக் கூத்து என்னும்) நடனத்தை ஆடி அருளிய பெருமாளே.