திருப்புகழ் 1306 கும்பகோணம் (க்ஷேத்திரக் கோவை)

தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன ...... தனதான
கும்ப  கோணமொ  டாரூர்  சிதம்பரம் 
உம்பர்  வாழ்வுறு  சீகாழி  நின்றிடு 
கொன்றை  வேணியர்  மாயூர  மம்பெறு  ......  சிவகாசி 
கொந்து  லாவிய  ராமே  சுரந்தனி 
வந்து  பூஜைசெய்  நால்வேத  தந்திரர் 
கும்பு  கூடிய  வேளூர்  பரங்கிரி  ......  தனில்வாழ்வே 
செம்பு  கேசுர  மாடானை  யின்புறு 
செந்தி  லேடகம்  வாழ்சோலை  யங்கிரி 
தென்றன்  மாகிரி  நாடாள  வந்தவ  ......  செகநாதஞ் 
செஞ்சொ  லேரக  மாவா  வினன்குடி 
குன்று  தோறுடன்  மூதூர்  விரிஞ்சைநல் 
செம்பொன்  மேனிய  சோணாடு  வஞ்சியில்  ......  வருதேவே 
கம்பை  மாவடி  மீதேய  சுந்தர 
கம்பு  லாவிய  காவேரி  சங்கமு 
கஞ்சி  ராமலை  வாழ்தேவ  தந்திர  ......  வயலூரா 
கந்த  மேவிய  போரூர்  நடம்புரி 
தென்சி  வாயமு  மேயா  யகம்படு 
கண்டி  யூர்வரு  சாமீக  டம்பணி  ......  மணிமார்பா 
எம்பி  ரானொடு  வாதாடு  மங்கையர் 
உம்பர்  வாணிபொ  னீள்மால்  சவுந்தரி 
எந்த  நாள்தொறு  மேர்பாக  நின்றுறு  ......  துதியோதும் 
இந்தி  ராணிதன்  மாதோடு  நன்குற 
மங்கை  மானையு  மாலாய்ம  ணந்துல 
கெங்கு  மேவிய  தேவால  யந்தொறு  ......  பெருமாளே. 
  • கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
    (1) கும்பகோணம், அதனுடன் (2) திருவாரூர், (3) சிதம்பரம்,
  • உம்பர் வாழ்வுறு சீகாழி
    தேவர்கள் விரும்பி வாழ்க்கை கொள்ளும் (4) சீகாழி,
  • நின்றிடு கொன்றை வேணியர் மாயூரம்
    நிலையான கொன்றை மலர்ச்சடையர் சிவனுடைய (5) மாயூரம்,
  • அம்பெறு சிவகாசி
    அழகு வாய்ந்த (6) சிவகாசி,
  • கொந்து உலாவிய ராமேசுரம்
    திரளான பக்த ஜனங்கள் கூட்டமாக உலாவும் (7) ராமேஸ்வரம்,
  • தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
    ஒப்பற்ற நிலையில் வந்து பூஜை செய்கின்ற, நான்கு வேதங்களும் வல்ல மறையவர்கள்
  • கும்பு கூடிய வேளூர்
    கூட்டமாகக் கூடும் (8) புள்ளிருக்கும் வேளூர் - வைத்தீஸ்வரன் கோயில்,
  • பரங்கிரி தனில்வாழ்வே
    (9) திருப்பரங்குன்றம் எனப்படும் தலங்களில் வீற்றிருக்கும் செல்வமே,
  • செம்பு கேசுரம் ஆடானை
    (10) ஜம்புகேஸ்வரம் - திருவானைக்கா, (11) திருவாடானை,
  • இன்புறு செந்தில் ஏடகம்
    நீ மகிழ்ந்து வாழும் (12) திருச்செந்தூர், (13) திருவேடகம்,
  • வாழ்சோலை யங்கிரி
    நீ வாழ்கின்ற சோலைமலையாம் (14) பழமுதிர்ச்சோலை,
  • தென்றன் மாகிரி
    தென்றல் காற்றுக்குப் பிறப்பிடமான பெருமலை (15) பொதியமலை,
  • நாடாள வந்தவ
    என்னும் தலங்களில் எல்லாம் வீற்றிருக்க வந்தவனே,
  • செகநாதம்
    (வடக்கே) பூரித்தலத்தில் (16) ஜெகந்நாதன் உருவில் காட்சி தந்தவனே,
  • செஞ்சொல் ஏரக
    செம்மையான உபதேசச் சொல்லை நீ உன் தந்தைக்குச் சொன்ன (17) திருவேரகம்,
  • மாவாவினன்குடி
    சிறந்த (18) திருவாவினன்குடி - பழநி,
  • குன்று தோறுடன்
    (19) குன்று தோறாடல், இவையுடன்
  • மூதூர் விரிஞ்சை
    பழம்பதி எனப்படும் (20) திருப்புனவாயில், விரிஞ்சிபுரம் எனப்படும் (21) திருவிரிஞ்சை,
  • நல் செம்பொன் மேனிய
    ஆகிய தலங்களில் அமரும் சிறந்த செம்பொன் நிறம் கொண்ட திருமேனியனே,
  • சோணாடு வஞ்சியில் வருதேவே
    சோழநாட்டின் தலைநகராகிய வஞ்சி என்னும் (22) கருவூரில் எழுந்தருளியுள்ள தெய்வமே,
  • கம்பை மாவடி மீதேய சுந்தர
    கம்பாநதி தீரத்தில் உள்ள (23) காஞ்சியில் மாமரத்தின் அடியில், மேலே லிங்க ரூபத்தில் பொருந்தி விளங்கும் அழகனே,
  • கம்பு உலாவிய காவேரி சங்கமுகம்
    சங்குகள் உலவும் காவேரி ஆறு கடலில் சங்கமம் ஆகும் (24) காவிரிப் பூம்பட்டினத்திலும்,
  • சிராமலை வாழ்தேவ தந்திர
    (25) திருச்சிராப்பள்ளி மலையில் வாழ்கின்ற தேவ சேனாபதியே,
  • வயலூரா
    (26) வயலூர்ப் பெருமானே,
  • கந்த மேவிய போரூர்
    நறுமணங்கள் நிரம்பிய (27) திருப்போரூர்,
  • நடம்புரி தென்சிவாயமு மேயாய்
    நீ நடனம் புரிந்த தலமாம் அழகிய சிவாயம் என்ற (28) திருவாட்போக்கி எனப்படும் தலங்களில் விளங்குபவனே,
  • அகம்படு கண்டி யூர்வரு சாமீ
    பாவத்தைத் தொலைக்கும் (29) திருக்கண்டியூரில் எழுந்தருளும் ஸ்வாமியே,
  • க டம்பணி மணிமார்பா
    கடப்ப மாலையை அணிந்துள்ள அழகிய மார்பனே,
  • எம்பிரானொடு வாதாடு மங்கையர்
    எங்கள் சிவபிரானுடன் நடனப் போட்டி செய்த காளியும், அவளைச் சேர்ந்த தோழியரும்,
  • உம்பர் வாணி பொன் நீள்மால் சவுந்தரி
    தேவலோகத்து சரஸ்வதியும், லக்ஷ்மி எனப்படும் நெடுமாலுக்கு உரிய அழகியும், ஆகிய இவர்கள் யாவரும்
  • எந்த நாள்தொறும் ஏர்பாக நின்று
    தினந்தோறும் உள்ளத்தில் எழுச்சியுடன் நின்று,
  • உறு துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு
    பொருந்திய துதியுடன் போற்றுகின்ற தேவயானையாம், இந்திரன் மனைவி சசியின் மகளோடு,
  • நன்குற மங்கை மானையு
    குறக்குலத்தில் தோன்றிய பெண் மான் வள்ளியையும்
  • மாலாய்மணந்து
    ஆசையுடன் திருமணம் செய்து கொண்டு
  • உலகெங்கு மேவிய தேவாலயந்தொறு பெருமாளே.
    உலகத்தில் எங்குமுள்ள தேவாலயங்கள்* தோறும் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com