தந்தனந் தந்தத் ...... தனதான
தந்தனந் தந்தத் ...... தனதான
சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
- சந்ததம் பந்தத் தொடராலே
எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே - சஞ்சலந் துஞ்சித் திரியாதே
துயரத்தால் சோர்ந்து திரியாமல், - கந்தனென்று என்று உற்று உனைநாளும்
கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும் - கண்டுகொண்டு
உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து, - அன்புற்றிடுவேனோ
யான்அன்பு கொள்வேனோ? - தந்தியின் கொம்பை
(ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை - புணர்வோனே
மணம் செய்துகொண்டு சேர்பவனே, - சங்கரன் பங்கிற் சிவைபாலா
சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய், - செந்திலங் கண்டிக் கதிர்வேலா
திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே, - தென்பரங் குன்றிற் பெருமாளே.
அழகிய திருப்பரங்குன்றில் அமர்ந்த பெருமாளே.