திருப்புகழ் · 129கரிய பெரிய (பழநி)
kariyaperiya
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய ...... திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி ...... யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி ...... யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் ...... தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு ...... முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி ...... யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை ...... யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய ...... பெருமாளே.
பத உரை · word meanings
- கரிய பெரிய எருமை கடவு
கறுத்த பெரிய எருமையைச் செலுத்தும் - கடிய கொடிய திரிசூலன்
கடுமையும் கொடுமையும் கொண்ட முச்சூலம் ஏந்திய யமன் - கறுவி யிறுகு கயிறொடு
கோபித்து, நெருக்கி அழுத்தும் பாசக்கயிறோடு - உயிர்கள் கழிய முடுகி யெழுகாலம்
உயிர் நீங்கும்படியாக வேகமாய் எழுந்து வரும்பொழுது, - திரியு நரியு மெரியு முரிமை தெரிய
திரிகின்ற நரியும், நெருப்பும் உரிமை கோரி - விரவி யணுகாதே
நெருங்கி அணுகாமல் - செறிவு மறிவு முறவு மனைய
என் நிறைவும், அறிவும், உறவும் போன்று - திகழு மடிகள் தரவேணும்
விளங்கும் உன் திருவடிகளைத் தந்தருள வேண்டும். - பரிய வரையி னரிவை
பெருமலையாம் இமகிரியின் மகளாம் பார்வதியை - மருவ பரம ரருளு முருகோனே
மணந்த பரமசிவன் அருளிய முருகோனே, - பழன முழவர்
வயல்களில் உழவர்கள் - கொழுவி லெழுது
ஏர்க்காலால் உழுகின்ற - பழைய பழநி யமர்வோனே
பழம்பெரும் பழநியில் வீற்றிருப்பவனே, - அரியு மயனும் வெருவ
திருமாலும் பிரமனும் அஞ்சி நிற்க, - உருவ அரிய கிரியை
உருவிச் செல்லும்படி அரிதான கிரெளஞ்ச மலைமீது - எறிவோனே
வேலாயுதத்தைச் செலுத்தியவனே, - அயிலு மயிலு மறமு நிறமும்
வேலும், மயிலும், வீரமும், ஒளியும், - அழகு முடைய பெருமாளே.
அழகும் கொண்ட பெருமாளே.



