திருப்புகழ் 125 ஓடி ஓடி (பழநி)

தான தான தனத்தன தத்தன
தான தான தனத்தன தத்தன
தான தான தனத்தன தத்தன ...... தனதான
ஓடி  யோடி  யழைத்துவ  ரச்சில 
சேடி  மார்கள்  பசப்பஅ  தற்குமு 
னோதி  கோதி  முடித்தவி  லைச்சுரு  ......  ளதுகோதி 
நீடு  வாச  நிறைத்தஅ  கிற்புழு 
கோட  மீது  திமிர்த்தத  னத்தினில் 
நேச  மாகி  யணைத்தசி  றுக்கிக  ......  ளுறவாமோ 
நாடி  வாயும்  வயற்றலை  யிற்புன 
லோடை  மீதி  னிலத்ததி  வட்கையி 
னாத  கீத  மலர்த்துளி  பெற்றளி  ......  யிசைபாடுங் 
கோடு  லாவி  யமுத்துநி  ரைத்தவை 
காவுர்  நாட  தனிற்பழ  நிப்பதி 
கோதி  லாத  குறத்திய  ணைத்தருள்  ......  பெருமாளே. 
  • ஓடி ஓடி அழைத்து வரச் சில சேடிமார்கள் பசப்ப
    இளைஞர்களை ஓடி ஓடி அழைத்துவரவும், சில தோழிகள் பசப்பு மொழிகள் கூறி உபசரிக்கவும்,
  • அதற்குமுன் ஓதி கோதி முடித்த இலைச்சுருள் அது கோதி
    அதற்கு முன்பு கூந்தலை வாரிச் சுருட்டி அழகாக முடிக்கவும், வெற்றிலைச் சுருளைத் திருத்தவும்,
  • நீடு வாச நிறைத்த அகிற்புழுகு ஓட மீது திமிர்த்த தனத்தினில்
    நிறைந்த வாசனையை உடைய அகில், புனுகு முதலிய நறுமணம் மிகுதியாகப் பூசப்பட்ட மார்பகங்களின் மீது
  • நேசமாகி அணைத்த சிறுக்கிகள் உறவாமோ
    ஆசை வைத்து தழுவிக்கொள்ளும் பொது மகளிரின் உறவு ஓர் உறவாகுமோ?
  • நாடி வாயும் வயல் தலையில் புனல் ஓடை மீதி(ல்) நிலத்த திவட்கையி(ல்)
    வளமை தானாகவே அமைந்த வயலிலும், நீரோடைகளிலும், இன்புறத்தக்க நிலப்பரப்பிலும்,
  • நாத கீத மலர்த்துளி பெற்று அளி இசைபாடும்
    வண்டுகள் மலர்களிலிருந்த தேனை உண்டு நாத கீதத்தை இசைத்து இசைபாடும்,
  • கோடு உலாவிய முத்து நிரைத்தவை
    சங்குகள் உலாவும், முத்துக்கள் வரிசையாக விளங்கும்
  • காவுர் நாடு அதனில் பழநிப்பதி
    வைகாவூர் நாட்டினில் பழநித் தலத்தில்,
  • கோதிலாத குறத்தி அணைத்து அருள் பெருமாளே.
    குற்றமில்லாத வள்ளிப் பிராட்டியைத் தழுவி அருள் புரிகின்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com