திருப்புகழ் 1247 தவநெறி (பொதுப்பாடல்கள்)

தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான
தவநெறி  தவறிய  குருடுகள்  தலைபறி  கதறிய  ......  பரபாதத் 
தருமிகள்  கருமிகள்  வெகுவித  சமயிக  ளவரொடு  ......  சருவாநின் 
றவனிவ  னுவனுட  னவளிவ  ளுவளது  இதுவுது  ......  வெனுமாறற் 
றருவுரு  வொழிதரு  வுருவுடை  யதுபதி  தமியனு  ......  முணர்வேனோ 
குவலய  முழுவதும்  மதிர்பட  வடகுவ  டிடிபட  ......  வுரகேசன் 
கொடுமுடி  பலநெரி  தரநெடு  முதுகுரை  கடல்புனல்  ......  வறிதாகத் 
துவல்கொடு  முறையிடு  சுரர்பதி  துயரது  கெடநிசி  ......  சரர்சேனை 
துகளெழ  நடநவில்  மரகத  துரகதம்  வரவல  ......  பெருமாளே. 
  • தவநெறி தவறிய குருடுகள்
    தவவழியை விட்டு விலகின குருடர்கள்,
  • தலைபறி கதறிய பரபாதத் தருமிகள்
    தலைமயிரைப் பறித்து, தமது கொள்கைகளை உரக்க வலியுறுத்தும் மற்றச் சமய (சமண) அறநெறியாளர்கள்,
  • கருமிகள் வெகுவித சமயிகள்
    தீய வினையாளர்கள், பலவிதமான சமய நெறிகளை அனுஷ்டிப்பவர்கள்,
  • அவரொடு சருவாநின்று
    ஆகிய இவர்களுடன் யான் பலகாலம் போராடி நின்றேன்.
  • அவன் இவன்உவன் உடன் அவள் இவள் உவள்
    அவன் - இவன் - உவன் என்றும், அவள் - இவள் - உவள் என்றும்,
  • அது இது உது எனுமாறற்று
    அது - இது - உது என்றும் குறித்துக்காட்ட இல்லாத வகையில் இருக்கும்,
  • அரு உரு ஒழிதரு உருவுடை
    உருவம் இன்மை - உருவம் உடைமை இரண்டும் நீங்கிய தன்மையை உடைய
  • அதுபதி தமியனும் உணர்வேனோ
    பொருளே கடவுள் என்ற உண்மையை அடியேனும் உணர்ந்து கொள்வேனோ?
  • குவலய முழுவதும் மதிர்பட வடகுவடு இடிபட
    உலகம் முழுவதும் அதிர்ச்சி கொள்ள, வடக்கில் உள்ள மேருமலை பொடிபட,
  • உரகேசன் கொடுமுடி பலநெரிதர
    சர்ப்பங்களின் தலைவன் ஆதிசேஷனின் வளைந்த பணாமுடிகளில் பலவும் நெரிபட,
  • நெடு முதுகுரை கடல்புனல் வறிதாக
    நீண்டதும், பழையதும், ஒலிப்பதுமான கடலில் நீர் வற்றிப் போக,
  • துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெட
    அர்ச்சனைப் பூக்களுடன் பூஜித்து விண்ணப்பிக்கும் தேவர்களின் தலைவன் இந்திரனின் துயரங்கள் நீங்க,
  • நிசி சரர்சேனை துகளெழ
    அசுரர்களின் சேனை அழிபட்டுப் பொடி எழ,
  • நடநவில் மரகத துரகதம் வரவல பெருமாளே.
    நடனம் செய்யும் மரகதப் பச்சைக் குதிரையாம் மயில் மீது ஏறி (போர்க்களத்துக்கு) வரவல்ல பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com