தானதன தானத்த தானதன தானத்த
தானதன தானத்த ...... தனதான
ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளேமெத்த
ஆரவட மேலிட்ட ...... முலைமீதே
ஆனதுகி லேயிட்டு வீதிதனி லேநிற்க
ஆமவரை யேசற்று ...... முரையாதே
வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்று
வீறுமுன தார்பத்ம ...... முகமாறு
மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க
மேதகவு நானித்த ...... முரையேனோ
நாலுமுக வேதற்கு மாலிலையில் மாலுக்கு
நாடவரி யார்பெற்ற ...... வொருபாலா
நாணமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்க
நாடுகுயில் பார்மிக்க ...... எழில்மாது
வேலைவிழி வேடச்சி யார்கணவ னேமத்த
வேழமுக வோனுக்கு ...... மிளையோனே
வீரமுட னேயுற்ற சூரனணி மார்பத்து
வேலைமிக வேவிட்ட ...... பெருமாளே.
- ஆலும் மயில் போல் உற்ற தோகையர்களே மெத்த ஆர வடம்
மேலிட்ட முலை மீதே
ஆடும் மயில் போல் உள்ள மாதர்கள், முத்து மாலையை மேலே அணிந்த, நிரம்பிய மார்பின் மீது - ஆன துகிலே இட்டு வீதி தனிலே நிற்க ஆம் அவரையே
சற்றும் உரையாதே
பொருத்தமான ஆடையை அணிந்து தெருவில் நிற்க ஆசைப்பட்ட விலைமாதர்கள் - இவர்களைப் பற்றியே சிறிதும் நான் பேசாமல், - வேலும் அழகு ஆர் கொற்ற நீல மயில் மேல் உற்று வீறும்
உனது ஆர் பத்ம முகம் ஆறு
உனது வேலாயுதத்தையும், அழகு நிறைந்த, வீரம் மிக்க, நீலநிறம் கொண்ட மயில் மீது ஏறி விளங்குவதான உன் மலர்ந்த தாமரை போன்ற ஆறு முகங்களையும், - மேவி இரு பாகத்தும் வாழும் அ(ன்)னைமார் தக்க மேதகவும்
நான் நித்தம் உரையேனோ
பொருந்தி உனது இரு புறங்களிலும் வாழ்கின்ற அன்னைமார் (வள்ளி, தேவயானை என்ற இருவருடைய) சிறந்த பெருமையையும், நான் நாள்தோறும் புகழ மாட்டேனோ? - நாலு முக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கும் நாட அரியார்
பெற்ற ஒரு பாலா
நான்கு முகங்களைக் கொண்ட பிரமனாலும், ஆலிலை மேல் பள்ளி கொள்ளும் திருமாலாலும் தேடிக் காண முடியாத சிவபெருமான் ஈன்ற ஒப்பற்ற குழந்தையே, - நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க நாடு
குயில் பார் மிக்க எழில் மாது
நாணம் உடையவளும், வெற்றி பெறும் வேடர் குலத்திலே யாவரும் விரும்பிப் போற்றும் குயில் போன்றவளும், உலகில் யாரினும் மேம்பட்ட அழகுள்ள பெண்ணும், - வேலை விழி வேடச்சியார் கணவனே
கடல் போன்ற கண்களைக் கொண்ட வேடப்பெண் ஆகிய வள்ளியின் கணவனே, - மத்த வேழ முகவோனுக்கும் இளையோனே
மதம் கொண்ட யானை முகம் உள்ள கணபதிக்குத் தம்பியே, - வீரமுடனே உற்ற சூரன் அணி மார்பத்து வேலை மிகவே
விட்ட பெருமாளே.
வீரத்துடன் போருக்கு எழுந்த சூரனுடைய அழகிய மார்பிடத்தே வேலாயுதத்தை வேகமாகச் செலுத்திய பெருமாளே.