திருப்புகழ் · 1191முத்தம் உலாவு (பொதுப்பாடல்கள்)

தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன
தத்தன தான தனத்தன ...... தனதான

Nangalappa Sharanam

முத்தமு லாவு தனத்தியர் சித்தச னாணை செலுத்திகள்
முத்தமி டாம னுருக்கிக ...... ளிளைஞோர்பால்
முட்டவு லாவி மருட்டிகள் நெட்டிலை வேலின் விழிச்சியர்
முப்பது கோடி மனத்திய ...... ரநுராகத்
தத்தைக ளாசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள்
தப்புறு மாற கமெத்திக ...... ளளவேநான்
தட்டழி யாது திருப்புகழ் கற்கவு மோத வுமுத்தமிழ்
தத்துவ ஞான மெனக்கருள் ...... புரிவாயே
மத்தக யானை யுரித்தவர் பெற்றகு மார இலட்சுமி
மைத்துன னாகி யவிக்ரமன் ...... மருகோனே
வற்றிட வாரி திமுற்றிய வெற்றிகொள் சூரர் பதைப்புற
வற்புறு வேலை விடுத்தரு ...... ளிளையோனே
சித்திர மான குறத்தியை யுற்றொரு போது புனத்திடை
சிக்கென வேத ழுவிப்புணர் ...... மணவாளா
செச்சையு லாவு பதத்தின மெய்த்தவர் வாழ்வு பெறத்தரு
சித்தவி சாக வியற்சுரர் ...... பெருமாளே.

பத உரை

  • முத்தம் உலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள்
    முத்து மாலை உலவுகின்ற மார்பினை உடையவர், மன்மதனின் கட்டளைகளை நடத்துபவர்கள்,
  • முத்தம் இடா மன உருக்கிகள் இளைஞோர் பால் முட்ட உலாவி மருட்டிகள்
    முத்தம் தந்து மனத்தை உருக்குபவர்கள், இளைஞோர்கள் இடத்தில் நன்றாகக் கலந்து (அவர்களை) மயங்கச் செய்பவர்கள்,
  • நெட்டு இலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்தியர்
    நீண்ட இலையை ஒத்த வேலை நிகர்க்கும் கண்களை உடையவர்கள், பல கோடிக் கணக்கான எண்ணங்களை உடையவர்கள்,
  • அநுராகத் தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள்
    காமப் பற்றை விளைக்கும் கிளி போன்றவர்கள், ஆசைகளைக் காட்டுபவர்கள், பச்சைக் கற்பூரம் அளாவிய தோள்களோடு மினுக்குபவர்கள்,
  • தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான் தட்டு அழியாது
    தப்பான வழியில் செல்லும் மனத்துடன் வஞ்சிக்கும் வேசிகள் இடத்திலே நான் நிலை குலையாது,
  • திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள் புரிவாயே
    உனது திருப்புகழைக் கற்பதற்கும் எப்போதும் ஓதுவதற்கும் (இயல், இசை, நாடகம் ஆகிய) முத்தமிழ் தத்துவ ஞானத்தை எனக்கு அருள்வாயாக.
  • மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே
    கும்பத் தலத்தை உடைய (கயாசுரன் என்ற) யானையின் தோலை உரித்தவராகிய சிவபெருமான் அருளிய மகனே, லட்சுமிக்கு மைத்துன* முறையில் உள்ள வலிமையாளனான திருமாலுக்கு மருகனே,
  • வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்பு உற வற்பு உறு வேலை விடுத்து அருள் இளையோனே
    கடல் வற்றிப் போகவும், நிரம்ப வெற்றி மமதையுடன் விளங்கிய சூரர்கள் பதைக்கும்படியாகவும், வலிமை உடைய வேலாயுதத்தைச் செலுத்தி அருளிய இளையோனே,
  • சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்து இடை சிக்கெனவே தழுவிப் புணர் மணவாளா
    அழகிய குறப்பெண் வள்ளியை அடைந்து, ஒரு சமயத்தில் தினைப் புனத்தில் சிக்கெனத் தழுவிச் சேர்ந்த மணவாளனே,
  • செச்சை உலாவு பதத்தின மெய்த் தவர் வாழ்வு பெறத் தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே.
    வெட்சி மலர் சூழும் பதத்தினனே, உண்மைத் தவசிகள் அழியாத இன்ப வாழ்க்கையைப் பெறுமாறு உதவுகின்ற சித்த மூர்த்தியே, விசாகனே, தகுதியுள்ள தேவர்களின் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * ஒரு சமயம் திருமாலும், அவரது அம்சமான உபேந்திரரும், லக்ஷ்மியும் உரையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கண்வ முநிவரைக் கவனிக்காததால், முநிவர் கடுங்கோபம் அடைந்து அவர்களை முறையே சிவ முநிவராகவும், வேடர் மன்னனாகவும், மானாகவும் பிறக்க சபித்து விடுகிறார். அடுத்த பிறப்பில் சிவமுநிவரான திருமாலுக்கும், மானாகிய லக்ஷ்மிக்கும் பிறக்கும் வள்ளியை உபேந்திரனான வேடர் மன்னன் நம்பிராஜன் கண்டெடுத்து வளர்க்கிறான். வள்ளியின் வளர்ப்புத் தந்தை உபேந்திரன் திருமாலின் தம்பியானதால் லக்ஷ்மிக்கு மைத்துனன் முறை ஆகிறது. எனவே வள்ளியை மணந்த முருகன் லக்ஷ்மியின் மைத்துனனின் மருகன் என்று இங்கு குறிப்பிடுகிறார்.
  • * Once, Lord VishNu, His brother UpEndran and Lakshmi were in deep conversation among themselves ignoring the presence of Sage KaNvar who visited them. The Sage became wild with anger and cursed them to take birth respectively as a Saivite sage, hunter-king and a deer. In the next birth, the Saivite sage unites with the deer, siring their daughter, VaLLi who was reared by NambirAjan, the hunter-king. As her foster father is UpEndran, the brother of VishNu, he becomes the brother-in-law of Lakshmi. As Murugan marries VaLLi, the poet refers to Him as "Lakshmi's brother-in-law's son-in-law".

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout