திருப்புகழ் · 1180பூசல்தரும் கயலும் (பொதுப்பாடல்கள்)

pUsaltharumkayalum

தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன ...... தனதான
பூசல்த ருங்கய லும்பொ ருந்திய
வாசந றுங்குழ லுந்து லங்கிய
பூரண கும்பமெ னுந்த னங்களு ...... மடமாதர்
போகம டங்கலை யும்பு ணர்ந்தநு
ராகம்வி ளைந்துவ ரும்பெ ரும்பிழை
போயக லும்படி யொன்றை யன்புற ...... நினையாதே
ஆசையெ னும்படி யுந்த னங்களு
மோகைந டந்திட வுந்தி னங்களும்
ஆருட னும்பகை கொண்டு நின்றுற ...... நடமாடி
ஆடிய பம்பர முன்சு ழன்றெதி
ரோடிவி ழும்படி கண்ட தொன்றுற
ஆவிய கன்றுவி டும்ப யங்கெட ...... அருள்வாயே
வாசவ னன்புவி ளங்க நின்றசு
ரேசர்கு லங்கள டங்க லுங்கெட
வானவர் நின்றுதி யங்கு கின்றதொர் ...... குறைதீர
வாரிய திர்ந்துப யந்து நின்றிட
மேருஅ டங்கஇ டிந்து சென்றிட
வாகைபு னைந்தொரு வென்றி கொண்டரு ...... ளிளையோனே
வீசிய தென்றலொ டந்தி யும்பகை
யாகமு யங்கஅ நங்க னும்பொர
வேடையெ னும்படி சிந்தை நொந்திட ...... அடைவாக
வேடர்செ ழும்புன வஞ்சி யஞ்சன
வேலினு ளங்கள்க லங்கி யின்புற
வேளையெ னும்படி சென்றி றைஞ்சிய ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • பூசல் தரும் கயலும் பொருந்திய வாச நறும் குழலும் துலங்கிய பூரண கும்பம் எனும் தனங்களும் மட மாதர்
    சண்டை செய்யும் கயல் மீன் போன்ற கண்களையும், பொருந்தியுள்ள நறு மணம் வீசும் கூந்தலையும், விளக்கமுறும் பூரண குடம் என்று சொல்லத்தக்க மார்பகங்களும் கொண்ட இளம் பெண்களின்
  • போகம் அடங்கலையும் புணர்ந்து அநுராகம் விளைந்து வரும் பெரும் பிழை போய் அகலும்படி ஒன்றை அன்புற நினையாதே
    காம சுகம் முழுமையும் அனுபவித்து ஆசைநிரம்பி வர, அதனால் ஏற்படும் பெரும் பிழைகள் நீங்கிப் போகுமாறு, அந்த ஒப்பற்ற பரம் பொருளை அன்புடன் நினைக்காமல்,
  • ஆசை எனும்படியும் தனங்களும் ஓகை நடந்திடவும் தினங்களும் ஆருடனும் பகை கொண்டு நின்று உற நடமாடி ஆடிய பம்பர(ம்) முன் சுழன்று
    ஆசை எப்படி எப்படி போகின்றதோ அப்படி அப்படியே என்னுடைய செல்வமும் மகிழ்ச்சியும் செல்லவும், எல்லாருடனும் பகைமை பூண்டு நிற்கும்படி இவ்வுலகில் உலவி, சுற்றுகின்ற பம்பரம்போலச் சுழன்று,
  • எதிர் ஓடி விழும்படி கண்டது ஒன்று உற ஆவி அகன்று விடும் பயம் கெட அருள்வாயே
    எதிரே ஓடி விழுதலைக் காண்பது போன்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பட, அதாவது உயிர் உடலை விட்டு நீங்கும் (இறப்பு என்னும்) பயம் ஒழிய அருள் புரிவாயாக.
  • வாசவன் அன்பு விளங்க நின்ற அசுரேசர் குலங்கள் அடங்கலும் கெட வானவர் நின்று தியங்குகின்றது ஒர் குறை தீர வாரி அதிர்ந்து பயந்து நின்றிட
    இந்திரனுடைய அன்பு விளக்கம் உற, இருந்த அசுரர் தலைவர்களுடைய கூட்டங்கள் எல்லாம் அழிபட, தேவர்கள் நின்று கலக்கம் கொண்டிருந்த அந்த ஒரு பெரிய குறை நீங்க, கடல் அதிர்ச்சியும் அச்சமும் உற்று நிற்க,
  • மேரு அடங்க இடிந்து சென்றிட வாகை புனைந்து ஒரு வென்றி கொண்டு அருள் இளையோனே
    மேரு மலை முழுவதும் இடிந்து போக, வெற்றி மாலையை அணிந்து ஒப்பற்ற வெற்றியைக் கொண்டருளிய இளையவனே,
  • வீசிய தென்றலொடு அந்தியும் பகையாக முயங்க அநங்கனும் பொர வேடை எனும்படி சிந்தை நொந்திட
    வீசிய தென்றலுடன் மாலைப் பொழுதும் பகைமை காட்டும்படியாக அமைய, மன்மதனும் சண்டை செய்ய, காம நோய் என்னும்படியாக மனம் நொந்து வருந்த,
  • அடைவாக வேடர் செழும் புன வஞ்சி அஞ்சன வேலின் உ(ள்)ளங்கள் கலங்கி இன்புற வேளை எனும்படி சென்று இறைஞ்சிய பெருமாளே.
    அதற்கு ஏற்ப, வேடர்களின் செழிப்பான தினைப் புனத்தில் இருந்த வஞ்சிக் கொடி போன்ற வள்ளியின் மை பூசப்பட்ட வேல் போன்ற கண்ணால் இருவர் மனங்களும் கலங்கி, இன்பம் பெற வேண்டி இதுதான் தக்க சமயம் என்ற குறிப்புடன் வள்ளியிடம் சென்று வணங்கிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits