தனதன தனதன தத்தாத் தானன
தனதன தனதன தத்தாத் தானன
தனதன தனதன தத்தாத் தானன ...... தந்ததான
கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள்
பதறிய சமயிக ளெட்டாப் பேரொளி
கருவற இருவினை கெட்டாற் காண்வரு ...... மென்றஏகங்
கருகிய வினைமன துட்டாக் காதது
சுருதிக ளுருகியொர் வட்டாய்த் தோய்வது
கசடற முழுதையும் விட்டாற் சேர்வது ...... ணர்ந்திடாதே
விதமது கரமுரல் மொட்டாற் சாடிய
ரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன்
வினைபுரி பவரிடு முற்றாச் சாலிரு ...... புண்டரீக
ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக
நுதலெழு தியசிறு பொட்டாற் சாயக
விரகுடை விழிவலை பட்டாற் றாதுந ...... லங்கலாமோ
பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக
சுருதிக ளடிதொழ எட்டாத் தேசிக
பருகென வனமுலை கிட்டாத் தாரகை ...... தந்துநாளும்
பரிவுற வெகுமுக நெட்டாற் றூடொரு
படுகையி னிடைபுழு வெட்டாப் பாசடை
படர்வன பரிமள முட்டாட் டாமரை ...... தங்கிவாழுஞ்
சததள அமளியை விட்டாற் றேறிய
சலநிதி குறுகிட வொட்டாச் சூரொடு
தமனிய குலகிரி பொட்டாய்த் தூளெழ ...... வென்றகோவே
தழைதரு குழைதரு பட்டாட் சாலவு
மழகிய கலவிதெ விட்டாக் காதலி
தலைமக நிலமடி தட்டாத் தேவர்கள் ...... தம்பிரானே.
- கதறிய கலை கொடு சுட்டாத் தீர் பொருள்
கதறிக் கதறிப் படிக்கின்ற சாத்திரங்களைக் கொண்டு சுட்டிக்காட்ட முடியாத ஒரு தீர்மானமான பொருள். - பதறிய சமயிகள் எட்டாப் பேரொளி
பதைபதைத்துப் பேசும் சமய வாதிகளால் எட்ட முடியாத ஒரு பெரிய ஜோதிப் பொருள். - கரு அற இரு வினை கெட்டாற்(கு) காண் வரும் என்ற ஏகம்
பிறப்பு நீங்கும்படி நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் ஒழிந்த பெரியோர்களால் மட்டும் காணக்கூடும் என்று சொல்லப்படும் ஒப்பற்ற தனிப் பொருள். - கருகிய வினை மனதுள் தாக்காதது
இருண்ட (அஞ்ஞான) தீச் செயல் எண்ணங்களைக் கொண்ட மனதைத் தீண்டாத பொருள். - சுருதிகள் உருகி ஒர் வட்டாய்த் தோய்வது
வேதங்கள் ஒன்றுபட்டு ஒரு திரண்ட உருவாக விளங்கும் பொருள். - கசடு அற முழுதையும் விட்டால் சேர்வ(து) உணர்ந்திடாதே
பிழை இல்லாமல் எல்லாவற்றையும் விட்டொழித்தால் வந்து கூடுகின்ற அரிய பொருளை நான் உணராமல், - வித மதுகர(ம்) முரல் மொட்டால் சாடிய ரதி பதி என வரு(ம்)
துட்ட ஆத்மாவுடன்
பலவிதமான வண்டுகள் ஒலிக்கும் மலர் அரும்புகளால் தாக்குகின்ற, ரதியின் கணவனான மன்மதன் என்ற பெயர் கொண்ட, துஷ்டனோடு - வினை புரிபவர் இடும் முற்றாச் சால் இரு புண்டரீக ம்ருகமத
முகுளித மொட்டால்
தொழில் புரிகின்றவர்களாகிய வேசியர் தருகின்ற, இளமை நிரம்பிய, இரு தாமரைகளான, கஸ்தூரி அணிந்த, குவிந்த மொட்டுப் போன்ற மார்பகங்களாலும், - கார் முக(ம்) நுதல் எழுதிய சிறு பொட்டால்
வில்லைப் போன்ற நெற்றியில் தீட்டப்பட்டுள்ள சிறிய பொட்டினாலும், - சாயக(ம்) விரகு உடை விழி வலை பட்டால் தாது
நலங்கலாமோ
அம்பைப் போல கூரியதாய், தந்திரம் நிறைந்த, கண் வலையினாலும் நான் பாதிக்கப்படுவதால், என் உடலில் உள்ள இரத்தம், எலும்பு, தசை, தோல் முதலிய எல்லா தாதுக்களும் வருந்தலாமோ? - பத மலர் மிசை கழல் கட்டாப் பாலக
மலர் போன்ற திருவடிகளில் கழலைக் கட்டுவதற்குக் கூட அவசியம் இல்லாத குழந்தையே, - சுருதிகள் அடி தொழ எட்டாத் தேசிக
வேதங்கள் உன் அடிகளைத் தொழுவதற்கு, அவைகள் எட்ட முடியாத குரு மூர்த்தியே. - பருகு என வன முலை கிட்டாத் தாரகை தந்து நாளும்
பரிவுற
உண்பாயாக என்று அழகிய மார்பகங்களை ஈந்து கார்த்திகைப் பெண்கள் அறுவரும் நாள்தோறும் பால் தந்து அன்பு கொள்ள, - வெகு முக நெட்டு ஆற்றூடு ஒரு படுகையினிடை
பல முகங்களைக் கொண்ட பெரிய ஆறாகிய கங்கைநதியின் இடையே இருந்த ஒப்பற்ற நீர்நிலையாகிய (சரவணப்) பொய்கையில் - புழு எட்டாப் பாசடை படர்வன பரிமள முள் தாள் தாமரை
தங்கி வாழும்
புழு முதலிய பிராணிகள் அணுக முடியாத பசுமையான இலைகள் படர்ந்துள்ளதும், நறு மணம் கொண்ட முள்ளும், தண்டும் உடைய தாமரை மலர் மீது தங்கி நீ வாழ்கின்ற - சத தள அமளியை விட்டு ஆற்று ஏறிய
நூறு இதழ்களால் அமைந்த படுக்கையை விட்டு எழுந்து, கங்கை ஆற்றிலிருந்து நீங்கி புறப்பட்டு, - சல நிதி குறுகிட ஒட்டாச் சூரொடு தமனிய குலகிரி
பொட்டாய்த் தூள் எழ வென்ற கோவே
கடல் நீர் வற்றிக் குறுகவும், வணங்காமுடியாகிய சூரனும், பொன்மயமான சிறந்த கிரவுஞ்ச மலையும் தொளைபட்டுப் பொடிப் பொடியாகும்படி வென்ற தலைவனே, - தழை தரு குழை தரு பட்டாள் சாலவும் அழகிய கலவி
தெவிட்டாக் காதலி தலை மக
நீ கொடுத்த (கரும்புத்) தழையால் மனம் குழைந்த பட்டுப் போன்றவளும், மிகவும் அழகான சேர்க்கை இன்பத்தில் தெவிட்டாத ஆசை தந்த தலைவியுமாகிய வள்ளியின் தலைவனே, - நிலம் அடி தட்டாத் தேவர்கள் தம்பிரானே.
கால்கள் பூமியில் தோயாத தேவர்களின் தம்பிரானே.