திருப்புகழ் 1142 ஊனோடு வாது உயிர் (பொதுப்பாடல்கள்)

தானான தானன தனத்த தத்தன
தானான தானன தனத்த தத்தன
தானான தானன தனத்த தத்தன ...... தந்ததான
ஊனோடு  வாதுயிர்  தரித்து  மட்டற 
வூசாடு  பாழ்குடி  லெடுத்த  திற்படி 
ஓயாத  மாமய  லுழற்றி  னிற்படு  ......  வம்பனேனை 
ஊதாரி  யாய்விடு  சமத்தில்  நிற்பது 
மாராத  காதலை  மனத்தில்  வைப்பது 
மூரோடு  போயெதிர்  பிணக்கி  னிற்பது  ......  முந்திடாதே 
தேனூறு  வாய்மொழி  பரத்தை  யர்க்கொரு 
நாய்போல  வேயவர்  வசத்தில்  நிற்பது 
சீர்கேட  தாய்விடு  சிறுப்பி  ளைத்தன  ......  மென்றுநீபச் 
சீதாள  மாமலர்  தொடுத்த  பத்தர்கள் 
சீராடி  நாண்மல  ரெனப்ரி  யப்படு 
சீர்பாத  போதக  மநுக்ர  கிப்பது  ......  மெந்தநாளோ 
மானாக  பாயலில்  படுக்கை  யிட்டவர் 
மாமேரு  வாரியில்  திரித்து  விட்டவர் 
மாடோடு  போய்வரு  மிடைக்குலத்தவ  ......  ரன்றுவாவி 
வாய்நாக  மோலிட  பிடித்த  சக்கிர 
வாளேவி  யேகர  வினைத்த  றித்தவர் 
மாமாய  னாயுல  களித்த  வித்தகர்  ......  தங்கைவாழ்வே 
கானாரு  மாமலை  தினைப்பு  னத்தினில் 
கால்மேல்வி  ழாவொரு  குறச்சி  றுக்கியை 
காணாது  போயியல்  புணர்ச்சி  யிட்டருள்  ......  கந்தவேளே 
காரேழு  மாமலை  யிடித்து  ருக்கெட 
காராழி  யேழவை  கலக்கி  விட்டுயர் 
காவான  நாடர்கள்  பகைச்ச  வட்டிய  ......  தம்பிரானே. 
  • ஊனோடு வாது உயிர் தரித்து மட்டு அற ஊசாடு பாழ் குடில் எடுத்து அதில் படி
    மாமிசம் பொருந்திய உடலுடன் பிராண வாயுவைத் தரிப்பதாகி, இறுதியில் அடியோடு அழுகிப் போகும் தன்மையான பாழான இந்தக் குடிசையை எடுத்து,
  • ஓயாத மா மயல் உழற்றினில் படு வம்பனேனை
    அந்த உடலில் இருந்தவாறு இப்பூமியில் ஓய்வில்லாதபடி நிறைந்த காம இச்சை என்கின்ற சுழற்சியில் அகப்பட்டுள்ள துஷ்டனாகிய எனக்கு,
  • ஊதாரியாய் விடு சமத்தில் நிற்பதும்
    வீண் செலவு செய்வதில் சாமர்த்தியமாக இருப்பதும்,
  • ஆராத காதலை மனத்தில் வைப்பதும்
    தெவிட்டாத ஆசை அடங்காத காமத்தை மனதில் வைத்திருப்பதும்,
  • ஊரோடு போய் எதிர் பிணக்கில் நிற்பதும் உந்திடாதே
    ஊரார்களுடன் மாறுபட்டு ஊடி நிற்பதும் (ஆகிய இக்குணங்கள்) என்னைத் தள்ளிச் செலுத்தாமல்,
  • தேன் ஊறும் வாய் மொழி பரத்தையர்க்கு ஒரு நாய் போலவே அவர் வசத்தில் நிற்பதும்
    இனிமை ஊறுகின்ற பேச்சை உடைய விலைமாதர்கள் பால் ஒரு நாயைப் போல அவர்கள் வசப்பட்டு நிற்பது
  • சீர் கேடதாய் விடும் சிறு பி(ள்)ளைத் தனம் என்று
    சீர் கேடான ஒழுங்கீனத்தில் கொண்டு விடும் அறியாமையாகும் என்று உணர்த்தி,
  • நீபச் சீ(த)தாள மா மலர் தொடுத்த பத்தர்கள்
    கடம்பின் குளிர்ந்த நல்ல மலர்களைக் கொண்டு பக்தர்கள்
  • சீராடி நாள் மலர் என ப்ரியப்படு(ம்) சீர் பாத போதகம் அநுக்ரகிப்பதும் எந்த நாளோ
    போற்றித் துதித்து, அன்று மலர்ந்த பூ என்று பாராட்டி விரும்பும் உனது திருவடியை உணரும் ஞான உபதேசம் எனக்கு நீ அருள் செய்வது என்று கிடைக்கும்?
  • மால் நாக பாயலில் படுக்கை இட்டவர்
    பெரிய பாம்பாகிய ஆதிசேஷனாகிய படுக்கையைக் கொண்டவர்,
  • மா மேரு வாரியில் திரித்து விட்டவர்
    மேரு மலையை (மத்தாகும்படி) பாற்கடல் கடைந்த போது கடலில் சுழல விட்டவர்,
  • மாடோடு போய் வரும் இடைக் குலத்தவர்
    மாடுகளுடன் மேய்க்கப் போய் வரும் இடையர் குலத்தவர்,
  • அன்று வாவிவாய் நாகம் ஓலிட பிடித்த சக்கிர வாள் ஏவியே கரவினைத் தறித்தவர்
    அன்றொரு நாள் மடுவில் கஜேந்திரன் என்னும் யானை கூச்சலிட்டு அழைக்க, தன் கையில் பிடித்திருந்த சுதர்சனம் என்ற சக்கரமாம் வாளைச் செலுத்தி முதலையைப் பிளந்தவர்,
  • மா மாயனாய் உலகு அளித்த வித்தகர் தங்கை வாழ்வே
    பெரிய மாயையில் வல்லவராய் உலகங்களைக் காத்தளிக்கும் பேரறிஞர் ஆகிய திருமாலின் தங்கையாகிய பார்வதியின் செல்வமே,
  • கான் ஆரு மா மலை தினைப் புனத்தினில்
    காடுகள் நிறைந்த பெரிய வள்ளிமலையில் இருந்த தினைப் புனத்தில்,
  • கால் மேல் விழா ஒரு குறச் சிறுக்கியை காணாது போய் இயல் புணர்ச்சி இட்டு அருள் கந்தவேளே
    காலின் மேல் விழுந்து, ஒப்பற்ற குறப்பெண்ணாகிய வள்ளியிடம் வேடர்கள் யாவருக்கும் தெரியாமல் சென்று, அன்புடன் அவளைக் கலந்த கந்தப் பெருமானே,
  • கார் ஏழு மா மலை இடித்து உருக் கெட கார் ஆழி ஏழு அவை கலக்கி விட்டு
    மேகங்கள் தங்கும், (சூரனுக்குத் துணையாக இருந்த) சிறந்த ஏழு மலைகளைப் பொடி செய்தும், அவற்றின் உருவம் அழிய வைத்தும, கரிய கடல்கள் ஏழையும் கலக்கி விட்டும்,
  • உயர் காவான நாடர்கள் பகைச் சவட்டிய தம்பிரானே.
    மேலான கற்பகச் சோலைகள் உள்ள தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழித்தொழித்த தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com