திருப்புகழ் 1137 உமை எனும் மயில் (பொதுப்பாடல்கள்)

தனதன தனதத்த தனனா தனனா
தனதன தனதத்த தனனா தனனா
தனதன தனதத்த தனனா தனனா ...... தனதான
உமையெனு  மயில்பெற்ற  மயில்வா  கனனே 
வனிதைய  ரறுவர்க்கு  மொருபா  லகனே 
உளமுரு  கியபத்த  ருறவே  மறவே  ......  னெனவோதி 
உருகுத  லொருசற்று  மறியேன்  வறியேன் 
  ருவினை  யிடையிட்ட  கொடியே  னடியேன் 
உணர்விலி  பெறமுத்தி  தருவாய்  துகிர்வாய்  ......  மடமாதர் 
அமையென  வளர்சித்ர  இருதோள்  தழுவா 
அமுதென  மதுரித்த  கனிவா  யணுகா 
அமளியி  லணைவுற்ற  அநுரா  கமகோ  ......  ததிமூழ்கி 
அநவர  தமுமுற்ற  மணிமா  முலைதோய் 
கலவியி  னலமற்ப  சுகமா  கினுமா 
அநுபவ  மிதுசற்றும்  விடவோ  இயலா  ......  தியலாதே 
தமனிய  குலசக்ர  கிரியோ  கடலோ 
விடமென  முடிவைத்த  முதுபே  ரிருளோ 
தனுவென  முனையிட்ட  கொலைமூ  விலைவேல்  ......  கொடுபார்வை 
தழலெழ  வருமுக்ர  எமபா  தகனோ 
யுகஇறு  தியில்மிக்க  வடவா  னலமோ 
தனியிவ  னெனமிக்க  பிசிதா  சனபூ  ......  பதியாகி 
இமையவ  ரனைவர்க்கும்  அறையோ  அறையோ 
அரியயன்  முழுதுக்கும்  அறையோ  அறையோ 
எழுபுவி  யுலகுக்கும்  அறையோ  அறையோ  ......  பொரவாரும் 
எனவரு  மொருதுட்டன்  முறையோ  முறையோ 
வடகுல  கிரியெட்டும்  அபிதா  அபிதா 
எனவொரு  அயில்தொட்ட  அரசே  யிமையோர்  ......  பெருமாளே. 
  • உமை எனும் மயில் பெற்ற மயில் வாகனனே வனிதையர் அறுவர்க்கும் ஒரு பாலகனே உளம் உருகிய பத்தர் உறவே மறவேன் என ஓதி
    மயில் போன்ற உமா தேவி பெற்ற, மயிலை வாகனமாக உடையவனே, கார்த்திகைப் பெண்டிர் அறுவருக்கும் ஒப்பற்ற பாலகனே, உள்ளம் உருகுகின்ற பக்தர்களின் நட்பாளனே, நான் உன்னை மறக்க மாட்டேன் என்று உன்னைப் போற்றி செய்து
  • உருகுதல் ஒரு சற்றும் அறியேன் வறியேன் இருவினை இடை இட்ட கொடியேன் அடியேன் உணர்வு இலி பெற முத்தி தருவாய்
    மனம் உருகுதல் ஒரு சிறிதும் அறியாதவன் நான். தரித்திரம் பிடித்தவன். நல் வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளின் இடையே சிக்கிக் கொண்டிருக்கும் கொடியவன் அடியேனாகிய நான் அறிவு இல்லாதவன். (அத்தகையவனாகிய நான்) பெற்று உய்ய முக்தியைத் தருவாயாக.
  • துகிர் வாய் மட மாதர் அமை என வளர் சித்ர இரு தோள் தழுவா
    பவளம் போன்ற வாயை உடைய இளம் பெண்களின் மூங்கில் போன்று செழித்து வளர்ந்துள்ள அழகிய இரண்டு புயங்களையும் தழுவி,
  • அமுது என மதுரித்த கனி வாய் அணுகா அமளியில் அணைவுற்ற அநுராக மகா உததி மூழ்கி
    அமுதம் போல் இனிப்பைக் கொண்ட (கொவ்வைக்) கனி போன்ற வாயை நெருங்கி அனுபவித்து, படுக்கையில் சேர்ந்து களிக்கும் காம இச்சை என்னும் பெரிய கடலில் முழுகி,
  • அநவரதமும் உற்ற மணி மா முலை தோய் கலவியின் நலம் அற்ப சுகம் ஆகினும் மா அனுபவம் இது சற்றும் விடவோ இயலாது இயலாதே
    எப்போதும் பொருந்தியுள்ள அழகிய மார்பகங்களில் படியும் புணர்ச்சியின் இன்பம் கொஞ்ச நேரமே நீடிக்கின்றது என்றாலும், அது பெரிதும் இயற்கையாகவே விரும்பப்படும் ஒரு நுகர்ச்சி இன்பமாகும். இதைக் கொஞ்சமும் விட்டொழிக்க முடியவே முடியாது.
  • தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ
    பொன் மலையாகிய சிறந்த மேரு மலையோ? சக்ரவாள கிரியோ? கடல் தானோ? விஷத்தை உச்சியில் கொண்டதும் முற்றினதுமான பெரிய இருட்டாகுமோ?
  • தனு என முனை இட்ட கொலை மூ இலை வேல் கொடு பார்வை தழல் எழ வரும் உக்ர எம பாதகனோ யுக இறுதியில் மிக்க வடவா அனலமோ
    வில்லைப் போல போர்க்கென்று அமைந்துள்ள, கொலை செய்ய வல்லதுமான மூன்று நுனிகளை உடைய வேல் போன்ற கண்களின் கொடிய பார்வை நெருப்பைக் கக்க வருகின்ற கொடுமை காட்டுகின்ற யமன் என்ற பாதகன் தானோ? யுக முடிவில் மிகுந்து எழுகின்ற வடவா முகாக்கினியோ?
  • தனி இவன் என மிக்க பிசித அசன(ர்) பூபதியாகி இமையவர் அனைவர்க்கும் அறையோ அறையோ
    ஒப்பற்ற இவன் என்று யாவரும் பயப்படும்படி, மாமிசத்தை உண்ணும் அரக்கர்களின் அரசனாகிய சூரன் தேவர்கள் யாவரும் போருக்கு வாருங்கள், வாருங்கள்,
  • அரி அயன் முழுதுக்கும் அறையோ அறையோ எழு புவி உலகுக்கும் அறையோ அறையோ பொர வாரும்
    திருமால், பிரமன் முதலியோர் யாவரும் போருக்கு வாருங்கள், போருக்கு வாருங்கள், மூவேழு உலகத்தினரும் போருக்கு வாருங்கள், போருக்கு வாருங்கள், என்னுடன் சண்டை செய்ய வாருங்கள்,
  • என வரும் ஒரு துட்டன் முறையோ முறையோ வட குல கிரி எட்டும் அபிதா அபிதா என
    என்று கூச்சலிட்டு வருகின்றான் அந்த ஒப்பற்ற துஷ்டனாகிய சூரன். எங்களைக் காத்தருள வேண்டும், காத்தருள வேண்டும் என்று வடக்கில் உள்ள அஷ்ட குல பர்வத வாசிகளும் அடைக்கலம், அடைக்கலம், புரந்தருளுக, காத்தருள்க என்று முறை இட,
  • ஒரு அயில் தொட்ட அரசே இமையோர் பெருமாளே.
    ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய அரசனே, தேவர்கள் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com