திருப்புகழ் 112 ஆதாளிகள் புரி (பழநி)

தானா தனதன தானா தனதன
தானா தனதன ...... தனதான
ஆதா  ளிகள்புரி  கோலா  கலவிழி 
யாலே  யமுதெனு  ......  மொழியாலே 
ஆழ்சீ  ரிளநகை  யாலே  துடியிடை 
யாலே  மணமலி  ......  குழலாலே 
சூதா  ரிளமுலை  யாலே  யழகிய 
தோடா  ரிருகுழை  ......  யதனாலே 
சோரா  மயல்தரு  மானா  ருறவிடர் 
சூழா  வகையருள்  ......  புரிவாயே 
போதா  ரிருகழல்  சூழா  ததுதொழில் 
பூணா  தெதிருற  ......  மதியாதே 
போரா  டியஅதி  சூரா  பொறுபொறு 
போகா  தெனஅடு  ......  திறலோனே 
வேதா  வுடனெடு  மாலா  னவனறி 
யாதா  ரருளிய  ......  குமரேசா 
வீரா  புரிவரு  கோவே  பழநியுள் 
வேலா  இமையவர்  ......  பெருமாளே. 
  • ஆதாளிகள் புரி கோலாகல விழியாலே அமுது எனு(ம்) மொழியாலே
    தற்பெருமைப் பேச்சு பேசும் பொது மகளிர் காட்டும் ஆடம்பரக் கண்களாலும், அமுதைப் போன்ற இனிய பேச்சாலும்,
  • ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே
    ஆழ்ந்த அழகிய சிரிப்பாலும், உடுக்கை போன்ற இடுப்பாலும், வாசனை மிகுந்த கூந்தலாலும்,
  • சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே
    சூதாடும் கருவி போன்ற இளமையான மார்பகத்தாலும், அழகிய தோடுகள் அணிந்த இரண்டு செவிகளாலும்,
  • சோரா மயல் தரு மானார் உறவு இடர் சூழா வகை அருள் புரிவாயே
    தளராத மயக்கம் தருகின்ற விலைமாதர்களின் உறவால் வரும் துன்பங்கள் என்னைச் சூழாத வண்ணம் அருள் புரிவாயாக.
  • போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில் பூணாது எதிர் உற மதியாதே
    மலர் நிறைந்த திருவடிகளைச் சிந்தியாமலும், பணியும் தொழிலை மேற்கொள்ளாமலும், எதிரே வந்து மோதுவதைப் பற்றி நினைக்காமலும்
  • போர் ஆடிய அதி சூரா பொறு பொறு போகாதே என அடு திறலோனே
    போர் செய்ய வந்த அதி சூரனை பொறு பொறு (தீய வழியில்) போகாதே என்று கூறி அவனை அழித்த வல்லமை வாய்ந்தவனே,
  • வேதா உடன் நெடு மால் ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா
    பிரமனுடன், நீண்ட திருமாலாலும் அறியாதவாரகிய சிவபெருமான் பெற்றருளிய குமரேசனே,
  • வீரா புரி கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே.
    வீரைநகரில்* எழுந்தருளியிருக்கும் தலைவனே, பழனியில் இருக்கும் வேலனே, தேவர்கள் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com