தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்
தந்தனந் தந்தனந் ...... தனதான
தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன்
தண்டவொன் றன்றொடுங் ...... கிடுமாவி
தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந்
தன்றுமென் றுந்தனந் ...... தனைநாடி
நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ்
சின்கணன் பொன்றில்மங் ...... கையர்நேசம்
நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் புன்கணந்
தின்பமொன் றின்றியிங் ...... குழல்வேனோ
சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன்
தொண்டனென் றன்றுகொண் ...... டிடுமாதி
தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன்
பங்கடிந் தென்பொடுந் ...... தொலையாநீர்
அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந்
தன்றுமின் றும்புனைந் ...... திடும்வேணி
அன்பர்நெஞ் சின்புறுஞ் செஞ்சொலன் கந்தனென்
றண்டரண் டந்தொழும் ...... பெருமாளே.
- தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு அந்தகன்
கோரப் பற்களையும், துன்பத்தை ஊட்டும் கொடிய மனத்தையும் உடையவனாகிய யமன் - தண்ட ஒன்ற அன்று ஒடுங்கிடும் ஆவி
சினத்துடன் எழுந்து நெருங்கி வர, அப்போது ஒடுங்கி நீங்கிவிடும் உயிர் - தஞ்சம் என்றும் பரிந்து இன் சொல் வஞ்சம் தெரிந்த அன்றும்
என்றும் தனம் தனை நாடி
(என்ற யாக்கையின் நிலையாமையைத் தெரிந்தும் கூட) பொது மகளிரிடம் அடைக்கலம் நீயே என்றும், அன்புப் பேச்சுக்களைப் பேசும் அந்த மாதர்களின் இனிய மொழிகளின் சூதைத் தெரிந்த அன்றும், அதன் பிறகு கூட எப்போதும், அவர்களுக்குக் கொடுக்கப் பொருளை நாடி, - நின் தன் அன்பு என்பது ஒன்று இன்றி
(இறைவா,) உன் மீது அன்பு என்பது சிறிதளவும் இல்லாமல், - நன்று என்று நெஞ்சின் கண் நண்பு ஒன்று இல் மங்கையர்
நேசம் நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்த
இதுதான் நல்லது என்று நினைத்து, மனதில் அன்பு ஒன்றுமே இல்லாத மாதர்களின் நட்பை நிலையாக என் கருத்தில் கொண்டு துன்பப்படுகின்ற மன நோய் அதிகரிக்க, - இன்பம் ஒன்று இன்றி இங்கு உழல்வேனோ
உண்மையான சுகம் என்பதே இல்லாமல் இந்த உலகில் அலைவேனோ? - சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று
அன்று கொண்டிடும் ஆதி
சுந்தர மூர்த்தி நாயனாரின் உலக பாசம் நீங்க, பரிவுடன் வந்து நான் இவனது அடிமை என்று முன்பொரு நாள் அவரைத் தடுத்து ஆட்கொண்ட முதல்வரும், - தும்பை செம் பொன் சொரிந்தும் தரும் கொன்றை துன்பம்
கடிந்து என்பொடும் தொலையா நீர்
தும்பை மலர், செம் பொன் இதழ்களைச் சொரிந்து விளங்கும் கொன்றைமலர், உயிர்களின் வினையைத் தொலைக்கும் எலும்பு மாலையுடன் வற்றாத கங்கை நதி, - அந்தம் முந்து இந்துவும் கெந்தம் மிஞ்சும் கொழுந்து அன்றும்
இன்றும் புனைந்திடும் வேணி
அழகு மிக்கு விளங்கும் சந்திரன், நறு மணம் மிக்குள்ள மருக்கொழுந்து, (இவைகளை) பழங்கால முதல் இப்போதும் அணிந்த சடையை உடைய - அன்பர் நெஞ்சு இன்புறும் செம் சொ(ல்)லன் கந்தன் என்று
அன்பு நிறைந்தவருமான சிவபெருமானுடைய மனம் குளிர இனிய சொற்களைப் பேசுபவனாகிய கந்த சுவாமி என்று - அண்டர் அண்டம் தொழும் பெருமாளே.
தேவர்களும் அண்டங்களும் வணங்கிப் போற்றுபவனாகிய பெருமாளே.