திருப்புகழ் · 1092அனகனென அதிகனென (பொதுப்பாடல்கள்)anaganenaadhiganena
தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன ...... தனதான
Nangalappa Sharanam
அனகனென அதிகனென அமலனென அசலனென
அபயனென அதுலனென ...... அநபாயன்
அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி
யவர்பெயரு மிடைசெருகி ...... யிசைபாடி
வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை
மகிபஎன தினையளவு ...... ளவுமீயா
மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய
மனமொழிய வொருபொருளை ...... அருள்வாயே
இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென
இருசதுர திசையிலுர ...... கமும்வீழ
இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில
மெனவிமலை யமுனை யென ...... நிழல்வீசிக்
ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி
கதுவியெழில் பொதியமிசை ...... படர்கோலக்
கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
பத உரைword meanings
- அனகனென அதிகனென
பாபம் அற்றவன் என்றும், யாவரிலும் மேம்பட்டவன் என்றும், - அமலனென அசலனென
மாசற்றவன் என்றும், எதற்கும் அசையாதவன் என்றும், - அபயனென அதுலனென
அச்சம் அற்றவன் என்றும், தனக்கு நிகரில்லாதவன் என்றும், - அநபாயன் அடல்மதனனென
அபாயங்கள் இல்லாதவன் என்றும், வலிமை வாய்ந்த மன்மதன் என்றும், - விசையனென முருகனென
வீரத்தில் அர்ச்சுனன் என்றும், அழகில் முருகனை ஒத்தவன் என்றும், - நெருடி யவர்பெயரு மிடைசெருகி யிசைபாடி
இணைத்து, பாடப்பட்டவரின் பெயர்கள் இடையில் வருமாறு பாட்டிலே நுழைத்து, அந்தப் பாடலை இசையுடன் பாடி, - வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்
பத்ம நிதி, சிந்தாமணி என்று கூறப்படும் ரத்தினம், சங்கநிதி, மேகம், காமதேநு, கற்பக விருட்சம் - இவைகளுக்கு கொடையில் ஒப்பான - கை மகிபஎன தினையளவு உளவுமீயா
கைகளை உடைய அரசனே நீ என்று, தினையளவும் உள்ள பொருளைக் கொடுக்காத - மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய
மனிதர்களின் வீட்டு வாசல்தோறும் சென்று புகழ்ந்து திரிகின்ற வறுமைநிலை நீங்கவும், - மொழியொழிய மனமொழிய வொருபொருளை அருள்வாயே
வாக்கு அடங்கவும், மனம் ஒடுங்கவும், ஓர் உபதேசப் பொருளை தந்தருள்வாயாக. - இனன் நிலவு தலைமலைய
சூரியன், சந்திரன் இவர்களின் ஒளியைத் தலைப்பாகம் நிகர்க்க, - அடியின் உகிர் இலைகளென
காலின் நகங்கள் நொச்சி இலையைப் போலிருக்க, - இருசதுர திசையில் உரகமும்வீழ
எட்டுத் திசைகளிலும் உள்ள நாகங்களும்* அஞ்சி கீழே விழ, - இரணிய சயிலம் ரசித சயில மரகதசயிலமென
பொன்மலை (மேரு), வெள்ளிமலை (கைலாயம்), மரகதமலை (ஈங்கோய் மலை), போல் விளங்குவதான வலிய உடலைக் கொண்டதாய், - விமலை யமுனை யெனநிழல்வீசி
விமலாதேவியின் (பார்வதியின்) திருக்கரங்களிலிருந்து உற்பத்தியாகும் நதியாகிய யமுனையின் நீல நிற ஒளியை வீசி, - ககனமழை யுகைகடவுள் உடலமென முதியவிழி கதுவி
ஆகாயத்திலுள்ள மேகங்களை வாகனமாகக் கொண்ட கடவுள் இந்திரனின் தேகம் என்று சொல்லும்படியாக உடல் முழுதும் முற்றின கண்களைக் கொண்டதாய்**, - எழில் பொதியமிசை படர்கோலக் கலபகக
அழகு நிரம்பி மேலே படர்ந்த தோகையைக் கொண்ட - மயில்கடவு நிருதர்கஜ ரததுரக கடகமுடன்
மயிலினை நடத்திச் சென்று, அசுரர்களின் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நாற்படைகளுடனும் - அமர்பொருத பெருமாளே.
போர் செய்த பெருமாளே.
குறிப்புகள் · notes
- * இந்திரனுக்கு கெளதம முநிவர் இட்ட சாபத்தால் உடலெங்கும் ஆயிரம் கண்கள் தோன்றின. அது போல மயிலின் தோகையில் கண்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.
- * The eight famous snakes are: VAsuki, Ananthan, Thakkan, SangapAlan, KuLigan, Padman, MahApadman and KArkkOdakan.
- ** IndrA was cursed by Sage Gauthama to be infested with a thousand eyes all over his body; the well-formed eyes on the Peacock's feather are compared to IndrA's eyes.
