திருப்புகழ் 109 அருத்தி வாழ்வொடு (பழநி)

தனத்த தானன தனதன தனதன ...... தனதான
அருத்தி  வாழ்வொடு  தனகிய  மனைவியு  ......  முறவோரும் 
அடுத்த  பேர்களு  மிதமுறு  மகவொடு  ......  வளநாடும் 
தரித்த  வூருமெ  யெனமன  நினைவது  ......  நினையாதுன் 
தனைப்ப  ராவியும்  வழிபடு  தொழிலது  ......  தருவாயே 
எருத்தி  லேறிய  இறையவர்  செவிபுக  ......  வுபதேசம் 
இசைத்த  நாவின  இதணுறு  குறமக  ......  ளிருபாதம் 
பரித்த  சேகர  மகபதி  தரவரு  ......  தெய்வயானை 
பதிக்கொ  ளாறிரு  புயபழ  நியிலுறை  ......  பெருமாளே. 
  • அருத்தி வாழ்வொடு
    ஆசையை விருத்தி செய்கின்ற இந்த வாழ்க்கையில்,
  • தனகிய மனைவியும்
    சரசம் செய்யும் மனைவியும்
  • உறவோரும் அடுத்த பேர்களும்
    சுற்றத்தாரும், நண்பர்களும்,
  • இதமுறு மகவொடு
    இன்பம் நல்கும் குழந்தைகளும்,
  • வளநாடும்
    வாழ்கின்ற செழிப்பான நாடும்,
  • தரித்த வூரும்
    குடிபுகுந்த ஊரும்
  • மெய் எனமன நினைவது
    நிரந்தரம் என்று மனம் நினைக்கும் பொய் எண்ணத்தை
  • நினையாது உன் த(ன்)னைப் பராவியும்
    நினைக்காமல் உன்னையே நினைத்தும் துதித்தும்,
  • வழிபடு தொழிலது தருவாயே
    வழிபடுகின்றதுமான தொழிலை எனக்கு நீ தர வேண்டும்.
  • எருத்தி லேறிய இறையவர்
    ரிஷபமாகிய நந்தியை வாகனமாகக் கொண்டு ஏறிய சிவபெருமானின்
  • செவிபுக வுபதேசம்
    செவிக்குள் புகுமாறு வேத மந்திரத்தை உபதேசம்
  • இசைத்த நாவின
    மொழிந்தருளிய இனிய நாவினை உடையவனே,
  • இதணுறு குறமகள் இருபாதம்
    தினைப்புனத்தின் பரணில் இருந்த வள்ளியின் இருபாதங்களையும்
  • பரித்த சேகர
    தாங்கிய திருமுடியை உடையவனே,
  • மகபதி தரவரு தெய்வயானை
    தேவேந்திரன் செய்த தவத்தினால் அவதரித்த தேவயானை
  • பதிக்கொள் ஆறிரு புய
    கணவனாகக் கொண்ட பன்னிரு புயத்தோனே,
  • பழநியிலுறை பெருமாளே.
    பழனியில் வாழும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com