திருப்புகழ் 1087 கலக மதன் காதும் (பொதுப்பாடல்கள்)

தனதனனந் தானம் தனதனனந் தானம்
தனதனனந் தானம் ...... தனதான
கலகமதன்  காதுங்  கனமலரம்  பாலுங் 
களிமதுவண்  டூதும்  ......  பயிலாலும் 
கடலலையங்  காலுங்  கனஇரையொன்  றாலும் 
கலைமதியங்  காயும்  ......  வெயிலாலும் 
இலகியசங்  காளும்  இனியவளன்  பீனும் 
எனதருமின்  தானின்  ......  றிளையாதே 
இருள்கெடமுன்  தானின்  றினமணிசெந்  தார்தங் 
கிருதனமுந்  தோள்கொண்  ......  டணைவாயே 
உலகைவளைந்  தோடுந்  கதிரவன்விண்  பால்நின் 
றுனதபயங்  காவென்  ......  றுனைநாட 
உரவியவெஞ்  சூரன்  சிரமுடன்வன்  தோளும் 
உருவியுடன்  போதும்  ......  ஒளிவேலா 
அலகையுடன்  பூதம்  பலகவிதம்  பாடும் 
அடைவுடனின்  றாடும்  ......  பெரியோர்முன் 
அறமுமறந்  தோயும்  அறிவுநிரம்  போதென் 
றழகுடனன்  றோதும்  ......  பெருமாளே. 
  • கலக மதன் காதும் கன மலர் அம்பாலும்
    கலகமிட வந்த மன்மதன் கொல்லுதல் போலச் செலுத்தும் பாரமான மலர்ப் பாணங்களாலும்,
  • களி மது வண்டு ஊதும் பயிலாலும்
    களிப்பு மயக்கத்தைத் தரும் தேனை உண்ட வண்டுகள் செய்யும் ரீங்கார ஒலியினாலும்,
  • கடல் அலை அங்கு ஆலும் கன இரை ஒன்றாலும்
    கடல் அலைகள் அங்கு ஒலிக்கும் பெருத்த ஓசை காதிலே விழுவதாலும்,
  • கலை மதியம் காயும் வெயிலாலும்
    கலைகளை உடைய சந்திரன் தீப்போல் காய்கின்ற வெயிலாலும்,
  • இலகிய சங்கு ஆளும் இனியவள் அன்பு ஈனும்
    விளக்கமுற்ற சங்கு வளையல்களை அணிந்தவளும், இனிய குணத்தை உடையவளும், அன்பையே தருகின்றவளும்,
  • எனது அரு மின் தான் இன்று இளையாதே
    மின்னல் போல ஒளி கொண்டவளுமான என்னுடைய அருமை மகள் தான் இன்று உன்னை நினைத்து இளைத்துப் போகாமல்,
  • இருள் கெட முன் தான் நின்று இன மணி செம் தார் தங்கு இரு தனமும் தோள் கொண்டு அணைவாயே
    அவளது மனதில் உள்ள துன்பம் நீங்க, அவள் முன் தோன்றி, ஒரே வர்க்கமான மணிகளால் ஆன செவ்விய மாலை தங்கும் இரு மார்பகங்களையும் உனது பன்னிரு தோளால் அணைந்தருளுக.
  • உலகை வளைந்து ஓடும் கதிரவன் விண் பால் நின்று உனது அபயம் கா என்று உனை நாட
    உலகை வலம் வந்து ஓடுகின்ற சூரியன் ஆகாயத்திலிருந்து, உனக்கு அடைக்கலம், என்னைக் காத்தருள்க என்று முறையிட்டு உன்னை வேண்டிய காரணத்தால்
  • உரவிய வெம் சூரன் சிரமுடன் வன் தோளும் உருவி உடன் போதும் ஒளி வேலா
    ஆற்றல் உடைய, கொடிய சூரனுடைய தலையுடன் வலிய தோளையும் ஊடுருவிச் சென்று, உடனே வெளி வந்த ஒளி வீசும் வேலைச் செலுத்தியவனே,
  • அலகையுடன் பூதம் பல கவிதம் பாடும் அடைவுடன் நின்றாடும் பெரியோர்
    பேய்களுடன் பூதங்கள் சேர்ந்து பல விதமான பாடல்களைப் பாடுகின்ற அடைவுக்கு ஏற்ப, தாம் நின்று நடனம் புரிகின்ற பெரியோராகிய சிவபெருமான்
  • முன் அறமும் அறம் தோயும் அறிவும் நிரம்ப ஓது என்று
    முன்னொரு நாள் அறத்தையும், அற நெறி அமைந்த ஞானப் பொருளையும் நன்றாக உபதேசிப்பாயாக எனக் கேட்க,
  • அழகுடன் அன்று ஓதும் பெருமாளே.
    அழகாக உடனே அன்று அவருக்கு உபதேசித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com