திருப்புகழ் 107 அபகார நிந்தை (பழநி)

தனதான தந்தனத் ...... தனதான
தனதான தந்தனத் ...... தனதான
அபகார  நிந்தைபட்  ......  டுழலாதே 
அறியாத  வஞ்சரைக்  ......  குறியாதே 
உபதேச  மந்திரப்  ......  பொருளாலே 
உனைநானி  னைந்தருட்  ......  பெறுவேனோ 
இபமாமு  கன்தனக்  ......  கிளையோனே 
இமவான்ம  டந்தையுத்  ......  தமிபாலா 
ஜெபமாலை  தந்தசற்  ......  குருநாதா 
திருவாவி  னன்குடிப்  ......  பெருமாளே. 
  • அபகார நிந்தைபட்டு
    பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி
  • உழலாதே
    அலையாமலும்,
  • அறியாத வஞ்சரை
    நன்னெறியை அறியாத வஞ்சகர்களிடம்
  • குறியாதே
    சேராமலும்,
  • உபதேச மந்திரப் பொருளாலே
    நீ எனக்கருளிய உபதேச மந்திரத்தின் பொருளையே துணையாகக் கொண்டு
  • உனை நான் நினைந்து
    உன்னையே நான் நினைந்து
  • அருள் பெறுவேனோ?
    உன் திருவருளைப் பெற மாட்டேனோ?
  • இபமா முகன்
    யானையின் சிறந்த முகத்தை உடைய வினாயகன்
  • தனக் கிளையோனே
    தனக்குத் தம்பியானவனே
  • இமவான் மடந்தை
    இமயராஜன் மகளாம் (பார்வதி என்னும்)
  • உத்தமிபாலா
    உத்தமியின் பிள்ளையே
  • ஜெபமாலை தந்த
    ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த*
  • சற் குருநாதா
    நல்ல குரு நாதனே
  • திருவாவினன் குடி பெருமாளே.
    திருவாவினன்குடி என்னும் பதிக்குப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com