தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர்
பாராய் வானாய் நீர்தீ காலா ...... யுடுசாலம்
பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி
னாலா றேழா மேனா ளாயே ...... ழுலகாகிச்
சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட
ராய்வே தாவாய் மாலாய் மேலே ...... சிவமான
தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்
சூடா நாடா ஈடே றாதே ...... சுழல்வேனோ
திருத ராட்டிர னுதவு நூற்றுவர்
சேணா டாள்வா னாளோர் மூவா ...... றினில்வீழத்
திலக பார்த்தனு முலகு காத்தருள்
சீரா மாறே தேரூர் கோமான் ...... மருகோனே
குருதி வேற்கர நிருத ராக்ஷத
கோபா நீபா கூதா ளாமா ...... மயில்வீரா
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
- பருதியாய்ப் பனி மதியமாய்ப் படர் பாராய்
சூரியனாகி, குளிர்ந்த சந்திரனாகி, பரந்த பூமியாகி, - வானாய் நீர்தீ காலாய் உடுசாலம் பலவு மாய்
ஆகாயமாகி, நீராகி, நெருப்பாகி, காற்றாகி, விந்தையான நக்ஷத்திரங்களாகி, மற்றும் பலவுமாகி, - பல கிழமையாய்ப் பதினால் ஆறேழா மேல் நாளாய்
ஞாயிறு முதலிய பல கிழமைகளுமாகி, 14+6+7 ஆகிய 27 சிறந்த நக்ஷத்திரங்களாகி, - ஏழுலகாகிச் சுருதியாய்ச் சுருதிகளின் மேற்சுடராய்
ஏழு உலகங்களாகி, வேதமாகி, வேதங்களுக்கு மேற்பட்ட ஒளிப் பொருளாகி, - வேதாவாய் மாலாய் மேலே சிவமான
பிரமனாகி, திருமாலாகி, இவர்களுக்கு மேற்பட்ட மங்கலப் பொருளானதும், - தொலைவிலாப் பொருள் இருள்புகாக்கழல்
அழிவு என்பதே இல்லாததான பரம்பொருளின், அஞ்ஞான இருள் என்பதே புகமுடியாத அந்தத் திருவடியை - சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ
முடிமேற் சூடாமலும், நாடாமலும் வாழ்வு ஈடேறாமல் வீணாகத் திரிவேனோ? - திருத ராட்டிரன் உதவு நூற்றுவர்
திருதராஷ்டிரன் பெற்ற துரியோதனாதி நூறு பேரும் - சேண் நாடாள்வான் நாளோர் மூவாறினில் வீழ
வீரசுவர்க்க நாட்டை ஆளும்படியாக பதினெட்டே நாட்களில் போர்க்களத்தில் மாண்டு விழவும், - திலக பார்த்தனும் உலகு காத்தருள்
சிறந்த அர்ச்சுனனும் உலகை ஆண்டு காத்தருளுகின்ற - சீரா மாறே தேரூர் கோமான் மருகோனே
சீருடன் வாழுமாறு அவனது தேரில் சாரதியாக இருந்து செலுத்தின பெருமான் திருமாலின் மருகனே, - குருதி வேற்கர
அசுரர்களின் ரத்தத்தில் தோய்ந்த வேலைக் கரத்திலே ஏந்தியவனே, - நிருத ராக்ஷத கோபா
அரக்கர்களாம் ராட்சதர்களின் மீது கோபம் கொண்டவனே, - நீபா கூதாளா மா மயில்வீரா
கடப்ப மாலையையும், கூதளப்பூ மாலையையும் அணிந்தவனே, அழகிய மயில் வீரனே, - குலிச பார்த்திபன் உலகு காத்தருள்
வஜ்ராயுதத்தை ஏந்திய அரசன் இந்திரனின் தேவலோகத்தைக் காத்தருளின - கோவே தேவே வேளே வானோர் பெருமாளே.
தலைவனே, தேவனே, முருகவேளே, தேவர்களின் பெருமாளே.