திருப்புகழ் 1058 பொதுவதாய்த் தனி (பொதுப்பாடல்கள்)

தனன தாத்தன தனன தாத்தன
தனன தாத்தன ...... தந்ததான
பொதுவ  தாய்த்தனி  முதல  தாய்ப்பகல் 
இரவு  போய்ப்புகல்  ......  கின்றவேதப் 
பொருள  தாய்ப்பொருள்  முடிவ  தாய்ப்பெரு 
வெளிய  தாய்ப்புதை  ......  வின்றியீறில் 
கதிய  தாய்க்கரு  தரிய  தாய்ப்பரு 
கமுத  மாய்ப்புல  ......  னைந்துமாயக் 
கரண  மாய்த்தெனை  மரண  மாற்றிய 
கருணை  வார்த்தையி  ......  ருந்தவாறென் 
உததி  கூப்பிட  நிருத  ரார்ப்பெழ 
உலகு  போற்றிட  ......  வெங்கலாப 
ஒருப  ராக்ரம  துரக  மோட்டிய 
வுரவ  கோக்கிரி  ......  நண்பவானோர் 
முதல்வ  பார்ப்பதி  புதல்வ  கார்த்திகை 
முலைகள்  தேக்கிட  ......  வுண்டவாழ்வே 
முளரி  பாற்கடல்  சயில  மேற்பயில் 
முதிய  மூர்த்திகள்  ......  தம்பிரானே. 
  • பொதுவதாய்த் தனி முதல் அதாய்
    எவ்வுயிர்க்கும் பொதுவானதாகி, தனிப்பட்ட மூல முதற் பொருளாகி,
  • பகல் இரவு போய்ப் புகல்கின்ற வேதப்பொருள் அதாய்
    பகல், இரவு இவைகளைக் கடந்து சொல்லப்படுகின்ற வேதப் பொருளாகி,
  • பொருள் முடிவு அதாய் பெருவெளியதாய்
    அப்பொருளின் முடிவானதாகி, பெரிய வெட்ட வெளியாய் ஆகி,
  • புதைவு இன்றி ஈறு இல் கதி அதாய்
    மறைவு யாதொன்றுமன்றி, முடிவு இல்லாததான, யாவற்றுக்கும் அடைக்கலமாகி,
  • கருது அரியதாய் பருக அமுதமாய்
    எண்ணுவதற்கும் முடியாததாகி, உண்ணும் அமுதம்போல் இனிமையானதாகி,
  • புலன் ஐந்தும் மாய
    சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களும் ஒடுங்கி அழிய,
  • கரணம் மாய்த்து எனை மரணம் மாற்றிய
    மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகளின் சேட்டைகளை அழித்து, எனது மரண பயத்தை நீக்கிய,
  • கருணை வார்த்தை இருந்த ஆறு என்
    உனது அருள் மொழி உபதேசம் எத்தனை உயர்ந்த நிலையான அற்புதம்?
  • உததி கூப்பிட நிருதர் ஆர்ப்பு எழ
    கடல் ஓலமிடவும், அசுரர்கள் போரொலி செய்யவும்,
  • உலகு போற்றிட வெம் கலாப ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய உரவ
    உலகத்தோர் போற்றிப் புகழவும், வசீகரம் வாய்ந்த தோகை மயிலாகிய, ஒப்பற்ற வீரமான குதிரையை, ஓட்டிச் செலுத்திய வலிமை வாய்ந்தவனே,
  • கோக் கிரி நண்ப வானோர் முதல்வ பார்ப்பதி புதல்வ
    பூமியிலுள்ள மலைகளிடத்தே விருப்பம் உள்ளவனே, தேவர்களின் தலைவனே, பார்வதியின் மகனே,
  • கார்த்திகை முலைகள் தேக்கிட உண்ட வாழ்வே
    கார்த்திகைப் பெண்களின் மார்பகங்களில் பால் நிரம்பி வர அதைப் பருகிய செல்வமே,
  • முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில்
    தாமரை மீதும், திருப்பாற்கடலிலும், கயிலை மலையின் மீதும் முறையே வீற்றிருக்கும்
  • முதிய மூர்த்திகள் தம்பிரானே.
    மூத்தவர்களாகிய அயன், அரி, அரன் எனப்படும் கடவுளருக்கும் தனிப்பெரும் தலைவனே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com