திருப்புகழ் · 1035ஊனுந் தசையுடல் (பொதுப்பாடல்கள்)Ununthasaiyudal
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ...... தனதான
Thiruppugazh Anbargal
ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி
யூருங் கருவழி ...... யொருகோடி
ஓதும் பலகலை கீதஞ் சகலமு
மோரும் படியுன ...... தருள்பாடி
நானுன் திருவடி பேணும் படியிரு
போதுங் கருணையில் ...... மறவாதுன்
நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
நாடும் படியருள் ...... புரிவாயே
கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு
காலங் களுநடை ...... யுடையோனுங்
காருங் கடல்வரை நீருந் தருகயி
லாயன் கழல்தொழு ...... மிமையோரும்
வானிந் திரனெடு மாலும் பிரமனும்
வாழும் படிவிடும் ...... வடிவேலா
மாயம் பலபுரி சூரன் பொடிபட
வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே.
பத உரைword meanings
- ஊனுந் தசையுடல் தானொன்பதுவழி
மாமிசமும் சதையும் கூடிய இந்த உடல் தன்னுடன் ஒன்பது துவாரங்கள்* - ஊருங் கருவழி யொருகோடி
சேர்ந்துவரும் கருவின் வழி ஒரு கோடிக் கணக்கானது. (அந்தப் பிறவித் துயரம் ஒழிய) - ஓதும் பலகலை கீதஞ் சகலமும்
நான் படிக்கின்ற சாத்திர நூல்களையும், இசை ஞானத்தையும் மற்ற எல்லா கற்கவேண்டியவையும் - ஓரும் படியுனது அருள்பாடி
யான் உணரும்படியாக உன்னுடைய திருவருளைத் துதித்துப் பாடி, - நானுன் திருவடி பேணும் படி
யான் உன்னுடைய திருவடிகளை விரும்பிப் போற்றும்படி - இருபோதுங் கருணையில் மறவாது
காலை மாலை இரண்டு வேளைகளிலும் உன் கருணைத்திறத்தில் ஞாபகம் வைத்து, - உன்நாமம் புகழ்பவர் பாதந் தொழ
உன் திருநாமங்களைப் போற்றுவோரின் பாதங்களைத் தொழ - இனி நாடும் படியருள் புரிவாயே
இனியேனும் யான் விரும்பும்வண்ணம் நீ திருவருள் புரிவாயாக. - கானுந் திகழ்கதிரோனுஞ் சசியொடு
காட்டிலும் கூட தன் கதிர்களை வீசும் சூரியனும், சந்திரனும், - காலங்களு நடையுடையோனும்
இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலங்களும், காற்றும், - காருங் கடல்வரை நீருந் தருகயிலாயன்
மேகமும், கடலும், மலையும், நீரும் - இவைகளையெல்லாம் படைத்த கைலாயநாதனாகிய சிவபிரானின் - கழல்தொழுமிமையோரும்
பாதங்களைப் பணியும் தேவர்களும், - வானிந்திரன் நெடு மாலும் பிரமனும்
தேவநாட்டு இந்திரன், தெடிய திருமால், பிரமன் ஆகியோரும் - வாழும் படிவிடும் வடிவேலா
வாழும்படியாகச் செலுத்திய கூரிய வேலாயுதனே, - மாயம் பலபுரி சூரன் பொடிபட
பல மாயங்களைப் புரிந்த சூரன் தூள்பட்டு அழியும்படி - வாள்கொண் டமர்செய்த பெருமாளே.
வாள் கொண்டு போர்புரிந்த பெருமாளே.
குறிப்புகள் · notes
- * ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.
- * The nine portals of the body: two eyes, two ears, two nostrils, a mouth and two excretory organs.
