திருப்புகழ் · 1033தோடு உற்ற காது (பொதுப்பாடல்கள்)

thOduutRakAdhu

தானத்த தானத்த தானத்த தானத்த
தானத்த தானத்த ...... தனதான
தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற
தோய்மைக்க ணால்மிக்க ...... நுதலாலே
தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு மேன்மக்கள்
சோர்கைக்கு மால்விற்கு ...... மடவார்தம்
ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்க
ஓசைக்கு நேசித்து ...... உழலாதே
ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றி
யோதற்கு நீசற்று ...... முணர்வாயே
வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின்
மீதுற்ற பேதைக்கொர் ...... மணவாளா
வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்க
வேதத்தி லேநிற்கு ...... மயனாருந்
தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த
சேமத்தி னாமத்தை ...... மொழிவோனே
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • தோடு உற்ற காது ஒக்க நீடு உற்ற போர் உற்ற தோய் மைக் க(ண்)ணால் மிக்க நுதலாலே
    தோடு அணிந்துள்ள காது வரை நீண்டுள்ளதும், போர் செய்வதற்குச் சித்தமாய் உள்ளதுமான மை தீட்டிய கண்ணாலும், சிறந்த நெற்றியாலும்,
  • தோள் வெற்பினால் வில் கை வேளுக்கு மேன் மக்கள் சோர்கைக்கு மால் விற்கும் மடவார் தம்
    மலை போன்ற தோள்களாலும், (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனுடைய பாணங்களாலும், மேலான குணங்களை உடைய மக்களும் மனம் சோர்ந்து போகும்படி காம ஆசையை விற்கின்ற விலைமாதர்களின்,
  • ஊடற்குள்ளே புக்கு வாடிக் கலாம் மிக்க ஓசைக்கு நேசித்து உழலாதே
    ஊடல் பிணக்கில் சிக்கி வாட்டமுற, சண்டைக் கோபத்தால் மிக்கெழுந்த கூச்சல் சப்தத்தை விரும்பி (நான்) அலையாமல்,
  • ஊர் பெற்ற தாய் சுற்றமாய் உற்ற தாள் பற்றி
    எனது ஊர், ஈன்றெடுத்த தாய், எனது உறவினர் இவை எல்லாமாய் உள்ள (உனது) திருவடியைக் கெட்டியாகப் பிடித்து,
  • ஓதற்கு நீ சற்றும் உணர்வாயே
    போற்றித் துதிக்க நீ சிறிது எனக்கு உணர்த்த மாட்டாயோ?
  • வேடர்க்கு நீள் சொர்க்கம் வாழ்விக்க ஓர் வெற்பின் மீது உற்ற பேதைக்கு ஒர் மணவாளா
    வேடர்களையும் பெரிய சொர்க்கப் பூமியில் வாழ்விக்க விரும்பி சிறந்த வள்ளி மலையின் மேல் இருந்த பெண்ணாகிய வள்ளிக்கு ஒப்பற்ற மணவாளனே,
  • வேழத்தின் ஆபத்தை மீள் வித்த மால் ஒக்க வேதத்திலே நிற்கும் அயனாரும்
    யானையாகிய கஜேந்திரனை அதற்குற்ற ஆபத்திலிருந்து விடுவித்த திருமாலும், அவருடன் வேதத்தையே ஓதி நிற்கும் பிரமனும்,
  • தேடற்கு ஒணா நிற்கும் வேடத்தர் தாம் வைத்த சேமத்தின் நாமத்தை மொழிவோனே
    (முடியையும் அடியையும்) தேடுதற்கு முடியாத எல்லையில் நிற்கும் அழல் உருவம் கொண்ட வேடத்தினராகிய சிவபெருமான் தாம் வைத்துள்ள சேமிப்புப் பொருளாகிய ஐந்தெழுத்து நாமத்தின் (நமசிவாய) பெயரையும், புகழையும் (சம்பந்தராக வந்து) எடுத்து மொழிந்தவனே,
  • தீது அற்ற நீதிக்கு(ள்) ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே.
    குற்றம் இல்லாத நீதி நெறியில் பொருந்திய பக்தி சிறந்த அடியார்கள் போற்றி வணங்க, அவர்களை வாழ்வித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits