திருப்புகழ் · 1016குகையில் நவநாதர் (பொதுப்பாடல்கள்)

தனதனன தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த ...... தனதான

Thiruppugazh Anbargal

குகையில்நவ நாத ருஞ்சி றந்த
முகைவனச சாத னுந்த யங்கு
குணமுமசு ரேச ருந்த ரங்க ...... முரல்வேதக்
குரகதபு ராரி யும்ப்ர சண்ட
மரகதமு ராரி யுஞ்செ யங்கொள்
குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ...... ணறநூலும்
அகலியபு ராண மும்ப்ர பஞ்ச
சகலகலை நூல்க ளும்ப ரந்த
அருமறைய நேக முங்கு விந்தும் ...... அறியாத
அறிவுமறி யாமை யுங்க டந்த
அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன்
அருணசர ணார விந்த மென்று ...... அடைவேனோ
பகைகொள்துரி யோத னன்பி றந்து
படைபொருத பார தந்தெ ரிந்து
பரியதொரு கோடு கொண்டு சண்ட ...... வரைமீதே
பழுதறவி யாச னன்றி யம்ப
எழுதியவி நாய கன்சி வந்த
பவளமத யானை பின்பு வந்த ...... முருகோனே
மிகுதமர சாக ரங்க லங்க
எழுசிகர பூத ரங்கு லுங்க
விபரிதநி சாச ரன்தி யங்க ...... அமராடி
விபுதர்குல வேழ மங்கை துங்க
பரிமளப டீர கும்ப விம்ப
ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே.

பத உரை

  • குகையில்நவ நாதரும்
    குகையில் தவம் புரியும் நவநாதராகிய* பெருஞ்சித்தர்களும்,
  • சிறந்த முகை வனச சாதனும்
    திருமாலின் தொப்புளாம் தாமரை மொட்டில் தோன்றிய பிரமனும்,
  • தயங்கு குணமும்
    விளங்கும் ( த்வம், ரஜோ, தாம ம் ஆகிய) முக்குணங்களும்,
  • அசுரேசரும்
    அசுரரின் தலைவர்களும்,
  • தரங்க முரல்வேதக் குரகத புராரியும்
    அலைகடல் போல் ஒலிக்கும் வேதங்களை நான்கு குதிரைகளாகப் பூட்டி திரிபுரத்தை அழித்த சிவபிரானும்,
  • ப்ரசண்ட மரகத முராரியும்
    வீரம் மிகுந்த, மரகதப்பச்சை வண்ணனானவனும், முரன் என்ற அசுரனைக் கொன்ற முராரியாம் திருமாலும்,
  • செயங்கொள் குலிச கை வலாரியும்
    வெற்றி பெற்ற வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தி வலன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரனும்,
  • கொடுங்கண் அறநூலும்
    கடுமையான விதிகளை வகுக்கும் சாஸ்திர நூல்களும்,
  • அகலிய புராணமும்
    விரிவான புராணங்களும்,
  • ப்ரபஞ்ச சகலகலை நூல்களும்
    உலகிலுள்ள எல்லாக் கலை நூல்களும்,
  • பரந்த அருமறை யநேகமும்
    விரிந்துள்ள வேதநூல்கள் பலவும்,
  • குவிந்தும் அறியாத
    இவை யாவும் ஒன்று கூடிச் சேர்ந்து முயன்று தேடியும் அறிய முடியாத,
  • அறிவும் அறியாமையுங் கடந்த
    அறிவு, அறியாமை ஆகிய இரண்டுக்கும் அப்பால் உள்ள
  • அறிவு திருமேனி யென்று உணர்ந்து
    அறிவொளி எதுவோ அதுவே உன் திருமேனி என நான் உணர்ந்து,
  • உன் அருண சரணாரவிந்தம் என்று அடைவேனோ
    உன் சிவந்த தாமரை மலரன்ன திருவடியை என்று சேர்வேனோ?
  • பகைகொள்துரி யோதனன்பி றந்து
    பகைமையே உருவான துரியோதனன் தோன்றி
  • படைபொருத பாரதந்தெரிந்து
    படைகளோடு போர் செய்த மகாபாரத வரலாற்றை அறிந்து,
  • பரியதொரு கோடு கொண்டு சண்ட வரைமீதே
    பருத்த தனது ஒற்றைத் தந்தத்தால் பெருமலையாம் மேருமலை மீது,
  • பழுதற வியாசன் அன்றியம்ப
    குற்றமற்ற வகையில் வியாச முநிவர் முன்பொருநாள் சொல்லிவர,
  • எழுதிய வி நாயகன்
    அந்தப் பாரதத்தை எழுதிய விநாயக மூர்த்தி,
  • சிவந்த பவள மதயானை
    சிவந்த பவள நிறத்தைக் கொண்ட மதயானை முகத்துக் கணபதியின்
  • பின்பு வந்த முருகோனே
    பின்பு, தம்பியாக வந்த முருகனே,
  • மிகுதமர சாகரம் கலங்க
    மிகுந்த ஒலிசெய்யும் கடல் கலங்குமாறும்,
  • எழுசிகர பூதரம் குலுங்க
    ஏழு சிகரங்களை உடைய மலைகள் யாவும் குலுங்குமாறும்,
  • விபரித நிசாசரன்தியங்க அமராடி
    மாறுபட்ட புத்தியைக் கொண்ட சூரன் திகைக்கும்படியாகவும் போர் செய்து,
  • விபுதர்குல வேழ மங்கை
    தேவர் குலத்தவளும், யானை (ஐராவதம்) வளர்த்தவளுமான தேவயானையின்
  • துங்க பரிமள படீர கும்ப விம்ப ம்ருகமத
    பரிசுத்தமான சந்தன மணம் வீசும், கும்பம் போன்று ஒளிவிடும், கஸ்தூரி வாசம் மிக்க
  • பயோதரம் புணர்ந்த பெருமாளே.
    திருமார்பைத் தழுவிய பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * நவநாதராகிய பெருஞ் சித்தர் பின்வருமாறு: சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர். இவர்கள் குகைகளில் இருந்து சிவனைக் குறித்துத் தவம் செய்து சித்தராயினர்.
  • * The nine senior SidhdhAs (achievers - NavanAthars) - were as follows: SathyanAthar, SathokanAthar, AadhinAthar, AnAdhinAthar, VaghuLanAthar, MadhanganAthar, MachchendranAthar, GadendranAthar and GorakkanAthar. They did penance in the caves praying to Lord SivA and attained the status of Sidhdha.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout